பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

373


மற்றவர்களைவிடத் தெளிவாக உணர்ந்தறிந்தாள். ஏனெனில் மற்றவர்களைவிட வாழ்க்கையின் துயர முகத்தை அவள்தான் நன்கு அறிந்திருந்தாள். அம்முகத்தில் சுருக்கங்கள் விழுவதையும். சிந்தனையும், எழுச்சியார்வமும் ஏற்படுவதைக் கண்டு அவளுக்கு மகிழ்ச்சியும் பயபீதியும் கலந்து ஏற்பட்டன. அவற்றில் தன் மகனது சேவையைக் கன்டதால் அவள் ஆனந்தம் அடைந்தாள். அவன் சிறையிலிருந்து தப்பி வந்தால், இவர்களுக்கெல்லாம் தலைமை வகிக்கும் ஆபத்தான பொறுப்புக்கு அவன் ஆளாவான் என்று அவள் அறிந்திருந்ததால், அவள் பயபீதியும் அடைந்தாள். அதனால் அவன் அழிந்தே போவான் என்று அஞ்சினாள்.

சமயங்களில் தன் மகனது உருவம் ஒரு சரித்திர புருஷனின் உருவம்போல் வியாபகம் பெற்று விரிந்து அவளுக்குத் தோன்றும், தான் இதுவரை கேள்விப்பட்ட நேர்மையும் தைரியமும் நிறைந்த சகல வார்த்தைகளின் உருவமாக, தான் இதுவரை கண்டு வியந்து போற்றிய சகல மக்களின் கூட்டுத் தோற்றமாக, தான் இதுவரை அறிந்திருந்த வீரமும் பிரபலமும் நிறைந்த சகல விஷயங்களின் சம்மேளனமாக, அவன் அவளுக்குத் தோற்றமளித்தான். இம்மாதிரிச் சமயங்களில் அவளது உள்ளத்தில் பெருமையும் அன்பும் பெருகி வழியும். அவனைப்பற்றி ஆனந்தம் கொண்டு நம்பிக்கையோடு தனக்குத்தானே நினைத்துக் கொள்வாள்:

“எல்லாம் சரியாகிவிடும் - எல்லாம் சரியாகிவிடும்!” அவளது அன்பு அவளது தாய்மைப் பாசம் ஓங்கியெழுந்து அவளது இதயத்தை வேதனையோடு குன்றிக் குறுகச் செய்யும். தாயின் பாச உணர்ச்சி தனது தீப ஒளியால் மனித உணர்ச்சியின் வளர்ச்சியைத் தடை செய்து, அதனை ஆட்கொண்டு ளித்துச் சாம்பலாக்கும். அந்த மாபெரும் உணர்ச்சியின் இடத்திலே, அவளது பயவுணர்ச்சியின் சாம்பல் குவியலுக்கிடையே அவளது மனம் ஒரே ஒரு சிந்தனைக்கு ஆளாகி உள்ளூரப் போராடிக்கொண்டிருக்கும்:

‘அவன் செத்துப் போவான்.... அவன் அழிந்து போவான்!.......”

14

ஒரு நாள் மதியம் அவள் சிறைச்சாலை ஆபீசில் பாவெலுக்கு எதிராக உட்கார்ந்து தாடி வளர்ந்து மண்டிய அவனது முகத்தை நீர்த்திரை மல்கிய கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தாள். தன்னுடைய கைக்குள் கசங்கிச் சுருண்டுபோயிருக்கும் அந்தச் சீட்டை அவன் கையில் ஒப்படைக்கும் சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தாள்.