பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

மக்சீம் கார்க்கி


வழக்கம்போல் ஓங்கியறைந்தான். ஜனங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டும் தலையைக் குனிந்துகொண்டும், பின்வாங்கத் தொடங்கினர்.

“சரி, நீங்கள் இங்கு எதற்கு நிற்கிறீர்கள்?” என்று போலீசாரைப் பார்த்துச் சொன்னான். “நான் சொல்கிறேன். கட்டுங்கள் அவனை!”

அவன் ஏதேதோ வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு ரீபினை நோக்கினான்.

“உன் கையைப் பின்னால் கட்டு” என்று உரத்த குரலில் சொன்னான் அவன்.

“இவர்கள் என் கையை கட்ட வேண்டியதில்லை” என்றான் ரீபின்: “நான் ஒன்றும் ஓடிப்போக நினைக்கவில்லை. சண்டை போடவும் விரும்பவில்லை. பின் ஏன் கைகளைக் கட்டுகிறீர்கள்?”

“என்ன சொன்னாய்” என்று கேட்டுக்கொண்டே அவனை நோக்கி அடியெடுத்து வைத்தான். அந்தப் போலீஸ் தலைவன்.

“ஏ, மிருகங்களா! நீங்கள் மக்களைச் சித்திரவதை செய்தது போதும்!” என்று தன் குரலை உயர்த்திக்கொண்டு சொன்னான் ரீபின். “உங்களுக்குச் சாவுமணி அடிக்கும் நாள் நெருங்கிவிட்டது!”

துடிதுடிக்கும் மீசையோடு ரீபினின் முகத்தையே வெறித்துப் பார்த்தான் அந்தத் தலைவன். பிறகு ஒரு அடி பின் வாங்கி வெறிபிடித்த குரலில் கத்தினான்:

“நாய்க்குப் பிறந்த பயலே! என்னடா சொன்னாய்!” திடீரென்று அவன் ரீபினின் முகத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தான்.

“உன்னுடைய முஷ்டியால், நீ உண்மையைக் கொன்றுவிட முடியாது!” என்று அவனை நோக்கி முன்னேறிக்கொண்டே சத்தமிட்டான் ரீபின். “அட்டுப் பிடித்த நாயே! என்னை அடிப்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?”

“எனக்கு உரிமை கிடையாதா? கிடையாதா?” என்று ஊளையிட்டுக் கத்தினான் அந்தத் தலைவன்.

மீண்டும் அவன் ரீபினின் தலையைக் குறிபார்த்துத் தன் கையை ஓங்கினான். ரீபின் குனிந்து கொடுத்ததால் அந்த அடி தவறிப்போய், அந்தப் போலீஸ் தலைவனே நிலை தவறித் தடுமாறிப் போய்விட்டான். கூட்டத்தில் யாரோ கனைத்தார்கள். மீண்டும் ரீபினின் ஆக்ரோஷமான குரல் ஒங்கி ஒலித்தது:

“ஏ, பிசாசே! என்னை அடிக்க மட்டும் துணியாதே, ஆமாம் சொல்லிவிட்டேன்”