பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

397


மறைந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அங்கு கூடி நின்ற முஜீக்குகள் கலைந்து சென்றார்கள். அந்த நீலக் கண் முஜீக் மட்டும் புருவத்துக்குக் கீழாகத் தன்னை உர்ரென்று பார்த்தவாறே தன்னை நோக்கி வருவதைக் கண்டாள் தாய். அவளது முழங்காலுக்குக் கீழே பலமிழந்து சுழலாடுவது. போல் தோன்றியது. திகைப்பும் பயமும் அவளது இதயத்தை ஆட்கொண்டு, அவளுக்குக் குமட்டல் உணர்ச்சியைத் தந்தன.

“நான் போகக்கூடாது. போகவே கூடாது” என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

அவள் பக்கத்திலிருந்த கம்பியைப் பலமாக பிடித்தவாறே நின்றாள்.

அந்தப் போலீஸ் தலைவன் கட்டிடத்தின் முகப்பிலேயே நின்று கைகளை வீசி. கண்டிக்கும் குரலில் பேசினான். அவனது குரலில் மீண்டும் பழைய வறட்சியும் உணர்ச்சியின்மையும் குடிபுகுந்துவிட்டன.

“நாய்க்குப் பிறந்த பயல்களா! நீங்கள் எல்லாம் முட்டாள்கள். உங்களுக்குத் தெரியாத விஷயங்களிலெல்லாம் நீங்கள் தலை கொடுக்கிறீர்கள். இது ஓர் அரசாங்கக் காரியம், தெரியுமா? நீங்கள் எனக்கு நன்றிதான் செலுத்த வேண்டும். நான் உங்களிடம் இவ்வளவு நல்லபடியாய் நடந்துகொண்டதற்காக, நீங்கள் என் முன் மண்டியிட்டு உங்கள் நன்றி விசுவாசத்தைக் காட்ட வேண்டும். உங்கள் அனைவரையும் கடுங்காவல் தண்டனைக்கு ஆளாக்க வேண்டுமென்று நான் நினைத்தால், அப்படியே செய்து முடிக்க எனக்குத் தைரியம் உண்டு.”

தலைகளிலே தொப்பியே வைக்காத சில முஜீக்குகள் மட்டும் அவன் சொன்னதைக் காதில் வாங்கிக்கொண்டார்கள், மேகக் கூட்டங்கள் தணிந்து இறங்கிக் கவிந்த உடனேயே இருள் பரவ ஆரம்பித்தது. அந்த நீலக்கண் முஜீக், தாய் நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கி வந்து சேர்ந்தான்.

“என்ன நடக்கிறது என்று பார்த்தீர்களா?”

“ஆமாம்” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.

“நீங்கள் இங்கு எதற்கு வந்தீர்கள்?” என்று அவளது கண்களையே பார்த்துக்கொண்டு கேட்டான் அவன்.

“நான் விவசாயிப் பெண்களிடமிருந்து லேஸ்களும், துணிகளும் விலைக்கு வாங்க வந்தேன்.”

அந்த முஜீக் தன் தாடியை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.

“எங்கள் பெண்கள் அந்தச் சாமான்களையே நெய்வதில்லையே!” என்று மெல்லக் கூறிக்கொண்டே அந்தக் கட்டிடத்தை ஒரு பார்வை பார்த்தான் அவன்.