பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

425


“அவசரப்படாதே. அந்த மனிதனை நாங்களும் சேர்ந்து கொண்டு அடிக்காமல் விட்டோமே. அதை நினைத்து நீ சந்தோஷப்பட வேண்டும்.”

அவன் வெகு நேரம் வரையிலும் ரகசியம் பேசிக்கொண்டிருந்தான். சமயங்களில் சத்தத்தை மிகவும் குறைத்துப் பேசினான். எனவே தாய்க்கு அநேகமாக ஒன்றும் கேட்கவில்லை, சமயங்களில் உச்ச ஸ்தாயியிலும் பேசினான். அப்படி பேசும்போது அவனது மனைவி அவனைத் தடுத்து நிறுத்துவாள்.

“உஷ்! அவளை எழுப்பி விட்டுவிடப் போகிறாய்”

தன்னைக் கவிந்து மேகம்போல் சூழ்ந்து வந்த தூக்கத்துக்குத் தாய் ஆளாகித் தூங்கலானாள்.

மாங்கலான அருணோதயப் பொழுது அந்தக் குடிசையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் வேளையில், ராத்திரிக் காவல் ஓய்ந்ததை அறிவிக்கும் தேவாலய மணியோசை மிகுந்து ஒலித்த நேரத்தில், தத்யானா தாயை உசுப்பி எழச் செய்தாள்.

“நான் தேநீர் தயாரித்துவிட்டேன். முதலில் ஒரு கோப்பை தேநீரைக் குடியுங்கள் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் நேராகச் சென்றால் குளிர் உறைக்கும்.”

ஸ்திபான் தனது சிக்கலான தாடியைக் கோதிவிட்டவாறே தாயிடம் அவளது விலாசத்தைக் கேட்டான். ராத்திரியில் தோன்றியதைவிட, இப்போது அந்த முஜீக்கின் முகம் தெளிவாகவும் பரிபூரணமாகவும் தோன்றுவதுபோலத் தாய்க்குப்பட்டது.

“நடந்ததையெல்லாம் எண்ணிப் பார்க்க எவ்வளவு வியப்பாக இருக்கிறது!” என்று அவர்கள் தேநீர் பருகும் சமயத்தில் சிரித்துக்கொண்டே சொன்னான், அவன்.

“என்னது?” என்று கேட்டாள் தத்யானா.

“நாம் ஒருவருக்கொருவர் பழகிப்போனதுதான் எவ்வளவு எளிதாக.....”

“நமது வேலையோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலுமே ஓர் அதிசயமான எளிமை இருக்கத்தான் செய்கிறது” என்று ஏதோ சிந்தித்தவாறே சொன்னாள் தாய்.

தாயிடம் விடைபெற்றுக் கொள்ளும்போது அவர்கள் எந்தவிதமான பரபரப்பையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் அவளிடம் பேசாமலே, தாங்கள் செய்யும் சின்னஞ்சிறிதான பற்பல செயல்களின்