பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

491


“நீங்கள் நீதிபதிகளைப் பார்த்துத்தான் பேசவேண்டும். பிரதிவாதிகளை நோக்கியல்ல!” என்று அந்தச் சீக்காளி நீதிபதி கோபத்தோடு உரக்கக் கத்தினார். அந்திரேயின் முகத்தில் ஒரு குறும்புத்தனமான உணர்ச்சி பிரதிபலித்ததைத் தாய் கண்டுகொண்டாள். அவனது மீசைகள் அசைந்து துடித்தன; கண்களில் ஒரு பூனைக்கண் பிரகாசம் தோன்றியதைத் தாய் கண்டாள். அவன் தனது தலையை மெலிந்த நீண்ட கரத்தால் பரபரவென்று தேய்த்துவிட்டுக்கொண்டான். பெரு மூச்செறிந்தான்.

“அப்படியா?” என்றான் அவன். “நான் இதுவரை உங்களை நீதிபதிகளாகக் கருதவில்லை. பிரதிவாதிகளாகவே கருதிவிட்டேன்!”

“விஷயத்தைப்பற்றி மட்டுமே பேசுங்கள்!” என்று அந்தக் கிழ நீதிபதி வறண்ட குரலில் எச்சரித்தார்.

“விஷயத்தையா? ரொம்ப சரி. உங்களை நேர்மையும் கெளரவமும் சுதந்திரமும் கொண்ட உண்மையான நீதிபதிகளாகக் கருதிக் கொள்வதென்று நான் என் மனத்தைப் பலவந்தப்படுத்தி ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டேன்........”

“நீதிமன்றத்துக்கு உங்கள் விமர்சனம் எதுவும் தேவையில்லை!”

“ஓஹோ, அப்படியா? ரொம்ப சரி. நான் எப்படியாவது பேசுகிறேன். நீங்கள் எல்லாம் ‘உன்னது’, ‘என்னது’ என்ற வித்தியாசம் பாராத, பாரபட்சமற்ற விருப்பு வெறுப்பற்ற நடுநிலைமையாளர்கள் என்றே வைத்துக்கொள்வோம். சரி, உங்கள் முன்னால் இரண்டுபேரை இழுத்துக்கொண்டு வருகிறார்கள். ஒருவன் சொல்கிறான்: ‘அவன் என்னைக் கொள்ளையடித்ததுமில்லாமல் என்னைக் கூழாய் அடித்து நொறுக்கிவிட்டான்’ என்கிறான், இன்னொருவன் ‘எனக்கு ஜனங்களைக் கொள்ளையடிக்க உரிமை உண்டு; என்னிடம் சொந்தமாக ஒரு துப்பாக்கி இருப்பதால் அவனைக் கூழாக அடித்து நொறுக்கவும் செய்வேன்’ என்கிறான்.....”

“வழக்கைப்பற்றி ஏதும் பேசத் தெரியாதா?” என்று குரலை உயர்த்திக்கொண்டு கேட்டார் அந்தக் கிழ நீதிபதி, அவரது கரம் நடுங்கியது. அவர் கோபப்படுவதைக் கண்டு, தாய்க்குச் சந்தோஷமாயிருந்தது. ஆனால் அந்திரேய் நடந்துகொள்ளும் விதம்தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவனது பேச்சு தன் மகனுடைய பேச்சோடு இணைந்து செல்வதாகத் தோன்றவில்லை. அவர்களது விவாதமெல்லாம் கண்ணியமும் கண்டிப்பும் நிறைந்ததாக இருக்க வேண்டுமென அவள் விரும்பினாள்.