பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

513


ஆயாசமும் சிரமமுமாயிருந்திருக்கும். இதோ இந்தப் படுக்கையில் படுத்துக்கொள்ளுங்கள். நான் தூங்கமாட்டேன். ஒரு வேளை நடுராத்திரியில் உதவிக்காக உங்களை எழுப்புவேன்...., படுத்தவுடனே விளக்கை அணைத்துவிடுங்கள்.”

அவள் அடுப்பில் இரண்டு விறகுகளை எடுத்துப்போட்டுவிட்டு அந்தக் குறுகிய கதவைத் திறந்துகொண்டு அப்பால் சென்றாள்; கதவையும் இறுக மூடிவிட்டுப் போனாள். தாய் அவள் போவதையே கவனித்துக்கொண்டிருந்தாள். பிறகு உடுப்புக்களைக் களைந்தாள்; அவளது சிந்தனை மட்டும் லுத்மீலாவைச் சுற்றியே வந்தது.

“அவள் எதையோ எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறாள்.....”

தாய்க்குக் களைப்புணர்ச்சியால் தலை சுற்றியது. எனினும் அவளது உள்ளம் மட்டும் அற்புதமான அமைதியோடு இருந்தது. அவளது கண்ணில் பட்ட ஒவ்வொன்றும் அவளது இதயத்தை ஒளி செய்து நிரம்பிப் பொழிந்தன. இந்த மாதிரியான அமைதி அவளுக்குப் புதிதானதல்ல. ஏதாவது ஒரு பெரும் உணர்ச்சிப் பரவசத்துக்குப் பிறகுதான் இந்த மாதிரி அவளுக்குத் தோன்றுவதுண்டு. முன்பெல்லாம் அந்த உணர்ச்சி அவளைப் பயந்து நடுங்கச் செய்யும். இப்போதோ அந்த உணர்ச்சியமைதி அவளது இதயத்தை விசாலமுறச் செய்து, அதில் ஒரு மகத்தான உறுதிவாய்ந்த உணர்ச்சியைக் குடியேற்றி வலுவேற்றியது. அவள் விளக்கை அணைத்துவிட்டு, குளிர் படிந்த படுக்கையில், போர்வையை இழுத்து மூடிச் சுருட்டி முடக்கிப் படுத்துக்கொண்டாள். படுத்தவுடனேயே அவள் சீக்கிரத்தில் ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆளாகிவிட்டாள்.

அவள் கண்களை மீண்டும் திறந்தபோது அந்த அறையில் மாரிக்காலக் காலைப் பொழுதின் வெள்ளிய, குளிர்ந்த ஒளி நிறைந்திருந்தது. கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு சோபாவின் மீது சாய்ந்திருந்த லுத்மீலா அவளைப் பார்த்தாள். புன்னகை செய்தாள்.

“அடி கண்ணே!” என்று கலங்கிப்போய் கூறினாள் தாய். “நான் என்ன பிறவியிலே சேர்த்தி? ரொம்ப நேரம் ஆகிவிட்டதோ?”

“வணக்கம்!” என்றாள் லுத்மீலா. “மணி பத்தடிக்கப் போகிறது. எழுந்திருங்கள். தேநீர் சாப்பிடலாம்.”

“நீங்கள் ஏன் என்னை எழுப்பவில்லை?”

“எழுப்பத்தான் வந்தேன். ஆனால் நான் வந்தபோது தூக்கத்தில் அமைதியாகப் புன்னகை செய்து கொண்டிருந்தீர்கள். அதைக் கலைக்க எனக்கு மனமில்லை.”