பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

518

மக்சீம் கார்க்கி


ஆனால் இடையிடையே பத்திரிகைக்கு மேலாக நிமிர்ந்து தாயின் முகத்தைப் பார்த்தான். அவனது உணர்ச்சி நிறைந்த பார்வையைக் காணும் போதெல்லாம் தாய்க்கு மகிழ்ச்சி பொங்கும் புன்னகை புரிந்து கொள்வான். கொஞ்சம்கூட வருத்தமின்றி மீண்டும் நிகலாயைப் பற்றிப் பேசத் தொடங்கினாள் லுத்மீலா. அவள் அப்படிப் பேசுவது இயற்கைதான் என்பதைத் தாய் கண்டுகொண்டாள். நேரம் வழக்கத்தை மீறி வெகு வேகமாகச் செல்வது போலிருந்தது. அவர்கள் காலைச் சாப்பாட்டை முடிப்பதற்குள்ளே மத்தியானப் பொழுது வந்துவிட்டது.

“எவ்வளவு நேரமாகிவிட்டது!” என்று அதிசயித்தாள் லுத்மீலா.

அந்தச் சமயத்தில் யாரோ வெளியிலிருந்து கதவை அவசர அவசரமாகத் தட்டினார்கள். அந்தப் பையன் எழுந்திருந்து, கண்களைச் சுருக்கி விழித்தவாறே லுத்மீலாவைப் பார்த்தான்.

“கதவைத் திற. செர்கேய், யாராயிருக்கலாம்?”

அவள் தனது உடுப்பின் பைக்குள்ளே அமைதியாகக் கையை விட்டவாறே தாயைப் பார்த்துச் சொன்னாள்.

“அவர்கள் போலீஸ்காரராயிருந்தால், பெலகேயா நீலவ்னா, அந்த மூலையிலே நின்று கொள்ளுங்கள். செர்கேய், நீ..”

“எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டு அந்தப் பையன் வெளியே சென்றான்.

தாய் புன்னகை புரிந்தாள். இந்த மாதிரியான ஏற்பாடுகள் அவளைக் கலவரப்படுத்தவே இல்லை ; ஏதோ ஒரு விபரீதம் நிகழப் போகிறது என்ற பயபீதி உணர்ச்சியும் அவளுக்கு இல்லை.

ஆனால் உள்ளே அந்த குட்டி டாக்டர்தான் வந்து சேர்ந்தான்.

வந்ததுமே அவன் அவசரமாகப் பேசத் தொடங்கினான்; “முதலாவது-நிகலாய் கைதாகிவிட்டான். ஆஹா! நீலவ்னா. இங்கேயா வந்திருக்கிறீர்கள்? கைது நடந்த போது நீங்கள் வீட்டில் இல்லையா?”

“அவன்தான் இங்கு அனுப்பினான்.”

“ஹூம், இதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை, சரி, இரண்டாவது—நேற்று இரவு சில இளைஞர்கள் பாவெலின் பேச்சை சைக்கோஸ்டைலில் ஐநூறு பிரதிகள் தயார் பண்ணிவிட்டார்கள். நான் அவற்றைப் பார்த்தேன், மோசமாக இல்லை, எழுத்துத் தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தது. அவர்கள் அவற்றை இன்றிரவு நகர் முழுவதிலும் விநியோகித்து விடுவதை விரும்பினார்கள். நான் அதை எதிர்த்தேன். அச்சடித்த பிரதிகளை வேண்டுமானால் நகரில் விநியோகிக்கலாம். இவற்றை வேறு இடங்களுக்கு அனுப்புவோம் என்றேன்.”

“அவற்றை என்னிடம் கொடுங்கள். நான் இப்போதே நதாஷாவிடம் கொண்டு சேர்க்கிறேன்” என்று ஆர்வத்தோடு சொன்னாள் தாய்.