பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—20—

தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்திலையோ? - எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குலமாக்கிட
மேலும் சமர்த்திலையோ. 14

தன்னை வணங்கத் தகாதவரை அந்தச்
சாமி விழுங்கட்டுமே - அன்றி
முன்னை யிருந்த கல்லோடு கல்லாகி
உருவம் மழுங்கட்டுமே. 15

இன்னலை நீக்கிடும் கோயிலின் சாமி,
இனத்தினில் பல் கோடி - மக்கள்
தன்னைவணங்கத் தகாதென்று சொல்லிடிற்
சாவதுவோ ஓடி? 16

குக்கலும் காகமும் கோயிலிற் போவதில்
கொஞ்சமும் தீட்டிலையோ? - நாட்டு
மக்களிலே சிலர் மாத்திரம் அந்த
வகையிலும் கூட்டிலையோ? 17

திக்கட்டுமே ஒரு கோயிலன்றோ? அதில்
சேரி அப்பால் இல்லையே? - நாளும்
பொய்க்கட் டுரைப்பவர் புன்மையும் பேசுவர்
நம்புவதோ சொல்லையே? 18