பக்கம்:தாழ்வு மனப்பான்மை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாழ்வுணர்ச்சி - உயர்வுந்தல்

9

'கோட்டம்' என்ற சொல்லை முதன் முதலில் மனப்பகுப்பியலில் புகுத்தியவர். அந்தச் சொல் முன்பே உளவியலில் ஏதோ ஒரு பொருளில் வழங்கியது. யுங் அதற்குப் புதிய பொருள் கொடுத்தார். பிராய்டு அந்தச் சொல்லுக்கு வேறொரு புதிய பொருள் கொடுத்து அதை நன்கு பயன்படுத்திக்கொண்டார்.

பிராய்டின் மனப்பகுப்பியல் கொள்கைப்படி அடி மனத்தில் வாழ்விலே நிறைவேறாத பலவிதமான ஆசைகளும் உணர்ச்சிகளும் அழுந்திக் கிடக்கின்றன. இந்த ஆசைகளைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் அவற்றை ஆமோதிக்கமாட்டார்கள். ஏனென்றால் அவை சமூகத்திலே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் பழக்க வழக்கங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் விரோதமானவை; நல்ல நடத்தை என்று எதை நாம் ஒப்புக்கொள்ளுகிறோமோ அதற்கு மாறாக நடக்கும்படி தூண்டக் கூடியவை அவைகள். ஆகையால்தான் மனிதன் அவற்றை அழுத்தி வைக்கப் பார்க்கிறான். அவனுடைய அறிவும் மனச்சாட்சியும் அப்படிச் செய்யும்படி அவனைத் தூண்டுகின்றன. இவ்விதமாக அடிமனத்திலே அழுந்திக் கிடக்கும் தீராத ஆசைகள், இழிந்த உணர்ச்சிகள் முதலியவற்றால் ஏற்படும் சிக்கலை பிராய்டு 'கோட்டம்' என்ற சொல்லால் குறித்தார்.

அடிமனத்தில் அதாவது நனவிலி மனத்தில் அழுந்திக் கிடக்கும் இழிந்த இச்சைகளும், உணர்ச்சிகளுமே மறைவாக நின்று ஒரு மனிதனுடைய வாழ்க்கையைப் பாதிக்கின்றன; அவற்றிற்கு வலிமை பெரிது என்பது பிராய்டு வகுத்த கொள்கை. அவர் இந்த நனவிலி மனத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தார். அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு 'பாலுணர்ச்சியே' மிகவும் வலிமை வாய்ந்தது என்றும், அதுவே மனிதனுடைய வாழ்க்கை