பக்கம்:திராவிட இயக்க வரலாறு 1996.pdf/809

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரூ.100 கோடி, ரூ.1000 கோடி, ரூ.5000 கோடி என்று ஒதுக்கீடு செய்து வருகிறது. பிற இந்திய தேசிய மொழிகளுக்கு அத்தகைய வாய்ப்பினையும், வசதியினையும் மத்திய அரசு ஏற்படுத்தித் தரவே இல்லை.

  திராவிட இயக்கம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை 1967இல் ஏற்றுக்கொண்டதற்குப் பிறகு, திராவிட இயக்கத்தாரிடத்திலும், பொது மக்களிடத்திலும், இந்தி எதிர்ப்பு உணர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு குன்றி வருகிறது என்பது வருந்தத்தக்கதாகத்தான் இருந்து வருகிறது. இந்த இரங்கத்தக்க நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய அரசின் இந்தி அதிகார ஆதிக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது என்பது உண்மையாகும்.
  1967இலிருந்து 1995 வரையில் திராவிடக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற திராவிட இயக்கங்கள், இந்தித் திணிப்பை எதிர்த்துச் சிறு சிறு ஆர்ப்பாட்டங்கள், கிளர்ச்சிகள், அறப்போர்கள் போன்றவற்றை அவ்வப்போது நடத்தி வந்தாலும், பொது மக்களிடத்தில் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியும், கிளர்ச்சியும் வலுப்பெறவில்லை. திராவிட இயக்கங்கள் ஆண்டுதோறும் சனவரி 25ஆம் நாளை வீரவணக்க நாளாகக் கொண்டு, இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை நினைவுபடுத்தி வருகின்றன என்றாலும், பொதுமக்களிடத்தில் இந்தியை முழுமூச்சோடு எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு எழவேண்டிய அளவுக்கு ஏற்படவில்லை.
  

1938க்கும் 1965க்கும் இடையில் வளர்ந்து ஓங்கிக், கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சியானது, நாளடைவில் மங்கி மறைந்து வருகின்ற நிலையை அடியோடு மாற்றி, மீண்டும் பழையபடி இந்தி எதிர்ப்பு உணர்ச்சியைப் பீறிட்டு எழச் செய்ய, திராவிட இயக்கத்தினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து வழிவகுக்காவிட்டால், எதிர்காலத்தில், இந்தி ஆதிக்க வல்லரசு இந்தியா முழுவதும் ஏற்பட்டுத், திராவிடத்தை அடியோடு அடிமை கொண்டுவிடும் என்பது மட்டும் உறுதி! 808