உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

பணத்தினை நான் கண்ணாலும் பார்க்கமாட்டேன். என்னிடம் தராதீர்கள். இந்தக் குடுக்கையில் போட்டுப் போங்கள்!” என்றாராம். சாமியார் கூட்டமெல்லாம் போன பிறகு குடுக்கையில் உள்ளதைக் கணக்கிட்டுக் கொள்ளுகிறவர் போலும்!

வஞ்ச மனமும் வெளிக்கோலமும் இத்துடன் நின்றுவிடுவதில்லை. மேலே கூறிய இதனையாவது மிக இயல்பானது என்று நாம் சொல்லிக்கொள்ளலாம், மிக மிகக் கொடிய தீமைகளையும் இப்படிப்பட்ட போலிக்கோலம் போடுபவர்கள் - வஞ்சமனம் படைத்தவர்கள் - செய்கின்றார்களே என்று ஆசிரியர் அச்சுறுத்திக் கூறுகின்றார். நகுதல் என்னும் அருமையான சொல்லினைக் கொண்டு உலக அனுபவத்தினை நயமாக நமக்குக் கூறுகின்றார்.

‘பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்’ என்று ஒரு குறட்பா முடிகிறது. ஐந்து பூதங்களும் மனத்திற்குள் சிரித்துக்கொண்டே இருக்கின்றன என்று சொல்லுகின்றார். யாரைப் பார்த்து? போலிவேடதாரியாகக் காட்சியளித்து மனத்திற்குள் வஞ்சகமாக நடந்து கொள்ளுகின்றவனைப் பார்த்து அப்படிச் சிரிக்குமாம்.

தான் செய்கின்ற வஞ்சகமான செய்கை யாருக்குமே தெரியாது என்று அந்தப் போலிவேடதாரி நினைத்துக் கொண்டு இருக்கின்றானாம், பஞ்ச பூதங்களும் எள்ளி நகையாடி அகத்தில் சிரித்துக்கொண்டிருப்பது அவனுக்கு எப்படித் தெரியமுடியும்?

எதிர்காலத்தில் அவனுக்கு வர இருக்கின்ற பெருந்தீங்கினைத்தான் அவனால் எப்படி உணர்ந்துகொள்ள முடியும்? அதனால்தான் அவனைப் பார்த்து மனச்சாட்சியாகிய, ஐந்து பூதங்களும் மனத்திற்குள்ளே சிரித்துக்கொள்கின்றன என்றார். வருங்கால இடர்ப்பாட்டைக் குறிக்கும் எள்ளி நகையாடும் சிரிப்பாகக் கூறப்பட்டது.

2