பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்வன்மை

169



10.முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.

அமைச்சர்க்கு நன்கு சிந்தித்துப் பார்க்கும் அறிவு இருந்தால் மட்டும் பயனில்லை; அந்த அறிவுக்கு ஏற்பச் செய்யும் திறமையும் இருத்தல் வேண்டும். அத்தகைய திறமை இல்லாதவர் முடிவு பெறாத செயல்களையே செய்வர்.

முறைப்படச் சூழ்தல்-ஒழுங்குபட எண்ணுதல். 640

65. சொல்வன்மை


1.நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.

பேச்சு வன்மை என்பது ஒருவனுக்குச் செல்வம் போன்றதாகும். அந்தச் செல்வத்தைப் பிற செல்வங்களுக்குச் சம்மாக எண்ணுதல் கூடாது. அஃது எல்லாச் செல்வங்களிலும் சிறந்து விளங்குவதாக இருக்கின்றது.

சொல்வன்மை-பிறர் உள்ளங்களைக் கவரும் வகையில் பேசுந் தன்மை; நாநலம் என்னும் நலன்-பேச்சு வன்மை என்னும் செல்வம்; பிற நலன்களாவன: கேட்டறிதல். பார்த்தறிதல், சுவைத்தறிதல் முதலியன. 641

2.ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.

நல்ல சொல்லால் செல்வமும், தவறான சொல்லால் கேடும் வரும். ஆதலால், ஒருவர் தம் சொல்லில் தவறு நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.

சொல்லின் கண் சோர்வு-பேசும் போது நேரத் தக்க தவறு; காத்தோம்பல்-போற்றிக் காத்தல்; 'ஓம்பல்' இங்கே 'காத்துக் கொள்க’ என்னும் பொருளில் வந்துள்ளது. 642

3.கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

சொல்லும் போது உடனிருந்து கேட்டவர் தம் உள்ளத்தை வயப்படுத்துவதோடு, அவ்வாறு கேட்க இயலாதவரும் கேட்க விரும்புமாறு சொல்வதே சொல் வன்மை ஆகும்.



தி.-12