பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவையஞ்சாமை

193



3.பகையகத்துச் சாவார் எளியர்; அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

பகைவர் உள்ள போர்க்களத்தின் இடையே அஞ்சாது சென்று உயிர் விடுவோர் உலகத்திலே பலர் உள்ளனர். ஆனால், கற்றார் தம் அவைக்கண்ணே அஞ்சாது சென்று பேச வல்லவர் சிலரே ஆவர்.

எளியர்-இங்கே எளியர் என்னும் சொல் மிகப் பலராய் உள்ளமையைக் குறிக்க வந்துள்ளது. அரியர்-அருமையாகக் காணக் கூடியவர்; சிலர் 723

4.கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம் கற்றவற்றை அவர் உள்ளத்தே நன்கு பதியும்படி எடுத்துச் சொல்லித் தாம் சொன்னவைகளைக் காட்டிலும் சிறந்த பொருள்களைத் தம்மினும் மிக்காராகிய அக்கற்றாரிடமிருந்து மிகுதியாக அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

கற்றார் முன் அஞ்சாமல் எடுத்துச் சொல்வதாலும் அக்கற்றோரிடமிருந்து நாணாமல் கேட்டறிந்து கொள்ள முந்துவதாலும் இக்குறள் அவையஞ்சாமையின் பாற்படுகிறது. 724

5.ஆற்றின் அறிவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு.

அளவை நூலாகிய தருக்க சாத்திர நூலை அமைச்சர்கள் சொல்லிலக்கண நெறியின் படி அறிந்து கற்றல் வேண்டும். அவ்வாறு கற்றல் எதற்காக எனில் அது வேற்று வேந்தரிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்களுக்குத் தக்க வண்ணம் விடை தருதற் பொருட்டே ஆகும்.

ஆறு-வழி அல்லது நெறி; சொல்லிலக்கணம் நன்கு அறிந்த பிறகே அளவை நூலாகிய தருக்க நூலை அறிந்து கொள்ள வேண்டுமாதலின், தருக்க இலக்கணத்துக்குச் சொல் இலக்கணம் வழியாக உள்ளது. மாற்றம்-சொல்; மாற்றம் கொடுத்தல்-பதில் கூறுதல். 725