பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

திருக்குறள்



புரந்தார்-காப்பாற்றியவர், இங்கே அரசர்; சாக்காடு-சாவு இரந்து கோள் தக்கது-வேண்டிப் பெற்றுக் கொள்ளத் தக்கது. 780 .

79. நட்பு


1.செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

நட்பைப் போலச் செய்து கொள்ளுதற்கு அருமையானவை எவை உள்ளன? அத்தகைய நட்பைப் பெற்றுக் கொண்டால் அது போலத் தொழிலுக்கு அரிய காவலாய் இருப்பவை எவை உள்ளன?

யா-எவை; வினை-செயல், தொழில்; காப்பு-காவல். 781

2.நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.

அறிவுடையார் நட்புக்கள் பிறை மதி போன்று நாள் தோறும் வளர்ந்து வரும் தன்மையுடையன; அறிவிலார் நட்புக்கள் முழு மதி நாளுக்குநாள் தேய்ந்து வருதல் போல நாள் தோறும் குறையும் தன்மையுடையன.

நிறைநீர-நிறைந்து வரும் தன்மையுடையன; நீர-தன்மையுடையன; நீரவன் என்னும் சொல் இங்கே அறிவுடையவர் என்னும் பொருளில் வந்தது; கேண்மை - நட்பு; மதிபின் நீர-முழு மதி போன்று தேய்ந்து வரும் தன்மை உடையன; பேதையார்-அறிவில்லாதவர். 782

3.நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

நல்ல நூலில் உள்ள அரிய கருத்துக்கள் படிக்குந் தோறும் கற்போர் உள்ளத்தே புதுமையாகத் தோன்றி இன்பந்_தருதல் போன்று நற்குணமுடையார் நட்பானது பழகுந்தோறும் வளர்ந்து இன்பத்தைத் தரும்.

நவிலல்-கற்றல்; நூல்நயம்-நூலில் உள்ள அரிய கருத்துக்கள், அழகுகள் முதலியன; பயிலுதல்-பழகுதல்; பண்பு-நற்குணம்; தொடர்பு-நட்பு. 783