பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

திருக்குறள்



வெட்கப்பட வேண்டியவற்றுக்கு வெட்கப்படாமை, தேட வேண்டியவற்றைத் தேடாமை, அன்பின்மை, பாதுகாக்க வேண்டுவனவற்றைப் பாதுகாவாமை ஆகிய இவை பேதையின் தொழில்கள்.

நாடுதல்-தேடிப் பெறுதல்; நார்-அன்பு; பேணாமை- ாதுகாவாமை அல்லது போற்றாமை; நாண வேண்டுவன-பழிபாவங்கள். 833

4.ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான்அடங்காப்
பேதையின் பேதையார் இல்.

கற்க வேண்டிய நூல்களைக் கற்றும், அவைகளை நன்கு உணர்ந்தும், அவ்விதம் கற்று உணர்ந்தவைகளைப் பிறருக்கு உரைத்தும் கற்ற நெறியின் கண் தாம் நின்று அடங்கி ஒழுகாத பேதையரைப் போன்ற பேதையர் உலகத்தில் இல்லை. 834

5.ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.

ஏழு பிறவியிலும் தான் புகுந்து அழுந்தி வருந்துவதற்குரிய நரகத்தை அடையத் தக்க ஒரு செயலைப் பேதை ஒரு பிறவியிலேயே செய்து கொள்ள வல்லவனாவான்.

ஒருமை-ஒரு பிறவி; எழுமை-ஏழு பிறவிகள்; அளறு-நரகம்; புக்கு அழுந்தும்-அடைந்து வருந்துவான். 835

6.பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

செய்யும் வகையறியாத பேதை ஒரு செயலைச் செய்ய மேற்கொள்வானாகில் அந்தச் செயலும் பொய்த்துப் போவதோடு தானும் விலங்கு பூணுவான்.

பொய்படுதல்-செயல் முடிவு பெறாமலே பொய்த்துப் போதல்; ஒன்றோ-அந்த ஒன்று மட்டும் அன்று, வேறொன்றும் உண்டு என்பதைக் குறிக்க வந்த சொல்; புனை பூணுதல்-விலங்கு பூணுதல்: கையறியாப் பேதை-செய்யும் முறைமை அறியாத பேதை, ஒழுக்க நெறி அறியாத பேதை; கை-ஒழுக்க நெறி. 836