பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியாரைப் பிழையாமை

241



கெடல்-அழிதல்; அடல்-கொல்லுதல்; ஆற்றுபவர்-ஆற்றலில் வல்லவர்; இழுக்கு-குற்றம், தவறு; 'செய்க' என்பது இரண்டு வாக்கியங்களுக்கும் இடையில் இருந்து பொருள் தருகிறது. இதனை இடைநிலைத் தீவகம் என்பர். 893

4.கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.

ஆற்றல் உடையவர்கட்கு ஆற்றல் இல்லாதார் தீமையைச் செய்தல், தம்மைக் கொல்லத்தக்க எமனைக் கை காட்டி அழைத்தாற் போல் ஆகும்.

கூற்றம்-எமன்; விளித்தற்று-அழைத்தாற் போன்றது; ஆற்றுவார்-வல்லமை வாய்ந்தவர்; ஆற்றாதார்-ஆற்றல் இல்லாதவர். வல்லமை இல்லாதவர்; இன்னா-தீமை. 894

5.யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

மிகுந்த வலிமையினையுடைய வேந்தனாலே வெகுளப்பட்டவர், அந்த வேந்தனிடமிருந்து தப்பி எங்குச் சென்றாலும் எவ்விடத்தும் உயிர் வாழ மாட்டார்.

யாண்டு-எங்கு; வெந்துப்பு-மிக்க வலிமை; செறப்பட்டவர்-வெகுளப்பட்டவர். 895

6.எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

தீயால் சுடப்படினும் ஒருவாற்றால் உயிர் வாழ்தல் கூடும். ஆற்றல் மிக்க பெரியாரிடத்தில் குற்றம் செய்து கிடப்பவர் எவ்வாற்றாலும் தப்பிப் பிழைக்க முடியாது.

உய்வு-உயிர் தப்புகை; பிழைத்து ஒழுகுவார்-குற்றம் செய்து நடப்பவர். 896

7.வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.

பெருமையால் சிறப்புற்ற பெரியார், ஒருவன் மீது கோபம் கொள்வாராயின் அவனுக்கு எல்லா வகையாலும்