பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

திருக்குறள்



அற்றல்-செரித்தல்; நெடிது உய்த்தல்-நீண்ட காலம் நிலைத்து நிற்கும்படி செலுத்துதல்; ஆறு-வழி. 943

4.அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

முன் உண்ட உணவு செரித்ததனை அறிந்து, நன்றாகப் பசித்த பிறகு உடம்புக்கு மாறுபாடு இல்லாத உணவுகளையே உண்ண வேண்டும் என்பதை உறுதியாகக் கொண்டு அவற்றையே உண்ண வேண்டும்.

கடைப்பிடித்தல்-உறுதியாக இருத்தல்; மாறல்ல-மாறுபாடு இல்லாதவை, உடம்புக்குத் தீங்கு புரியாதவை; துவரப் பசித்தல்-நன்றாகப் பசித்தல். 944

5.மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

உடல் நலத்துக்கு மாறுபாடு இல்லாத உணவை அளவுக்கு மீறாமல் உண்டால் உயிருக்கு நேரக் கூடிய பிணித் துன்பம் யாதும் இல்லை!

மாறுபாடு-உடம்புக்கு ஒவ்வாத தன்மை; மறுத்து உண்ணல் -(அளவு மீறின்) தடுத்து அளவோடு உண்ணல். 945

6.இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

ஒருவன் தன் உடம்புக்கு ஏற்ற குறைந்த அளவு உணவு இன்ன அளவினது என்பதை அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நீங்காது நிற்றல் போல் மிகப் பெரிய உணவை உட் கொள்ளுபவனிடம் நோய் நீங்காது நிற்கும்.

இழிவு அறிதல்-உட்கொள்ளத் தக்க உணவின் குறைந்த அளவை அறிதல்; உண்பான் கண்-உண்பவனிடம்; கழிபேர் இரை-மிகவும் அதிகமான உணவு. 946

7.தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

உணவு செரித்தற்குத் தன் வயிற்றில் உள்ள சூட்டின் அளவுக்கு ஏற்றவாறு இல்லாமல், ஒருவன் அறியாமையால் மிகுதியாக உண்பானாயின் அவனுக்கு நோய்கள் அளவில்லாமல் ஏற்படும்.