பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

திருக்குறள்

குறள்: பெளத்த சமயத்தினரோ எனின், தாம் கொல்லார், எனினும் ஊனை விலைக்குப் பெற்றுண்பர். இதுவும் தவறு ஆகவே:

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்” (260)

- என்று குறள்

கூறுவதாயிற்று. பிறிதொரு கோட்பாடும் நம் சிந்தனைக் குரியது ஆகும்.

ஒருவன் முன்னே செய்த நல்வினை தீவினைகள் செய்தவனையே வந்து பொருந்தும் என்பது ஜைந சமயக் கோட்பாடு. அஃது எங்ஙனம் எனின், பசுக்கள் திரளாயிருக்கிற இடத்திலே ஒரு கன்றைத் தொலைவான இடத்தில் விட்டால் அந்தக்கன்று தன் தாயான பசுவையே வந்து சேரும். அது போலச் செய்த வினையும் செய்தவனையே வந்தடையும். இதனைப்,

“பல்லாவுள் உய்த்துவிடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழ வினையும் அன்ன தகைத்தே தற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு”

என்ற நாலடியார் செய்யுள் 101 கூறும். வினை செய்தவனைத் தொடர்ந்து சென்று பயன் எய்துவிக்கும் என்ற கருத்துப் பின்வரும் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது.

“எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்” (207).

வினையாகிய பகை உயிர் செல்லும் இடந்தோறும் உடன் சென்று தன் பயனைக் கொடுக்கும் என்பது கீழ்வரும் சீவக சிந்தாமணி (2876 ஆம்) செய்யுளாலும் நன்கு புலப்படும்.

“அல்லித் தாளற்ற போதும் அறாதநூ லதனைப் போலத்
தொல்லைத்தம் உடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்காப் புல்லிக்கொண் டுயிரைச் சூழ்ந்து புக்குழிப் புக்குப் பின்னின் றெல்லையில் துன்ப வெந்தீச் சுட்டெரித்திடுங்கள் அன்றே.”