பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


மக்கள் ஈறாக எல்லாவுயிர்களிலும் நீங்காது எழுந்தருளியுள்ளான், மக்கள் அம்முதல்வனது திருவருளைப் பெற வேண்டுமானால் இறைவனது அருள்விளக்கத்திற்கு நிலைக்களமாகத் திகழும் எல்லாவுயிர்களிடத்திலும் நீங்காத அன்புடையராய் உலகியலில் உயிர்கள் படுந்துயரத்திற்கு உளம் இரங்கி அவற்றின் துயர்களைத் துடைத்து நலம் புரியும் சீவகாருணிய ஒழுக்கத்தினை மேற்கொள்ளுதல் இன்றியமையாததாகும்.

இவ்வுலகிற் பசியினாலும் நோயினாலும் பகையினாலும் மன்னுயிர்கள் படுந் துயரங்களை நேரிற் கண்டிருந்தும் அவற்றைப் போக்கும்வழிகளை ஒரு சிறிதும் நினையாது தமது உயிர்வாழ்க்கை ஒன்றனையே இனிதெனக்கருதி வாழ்வார் மிகப்பலர். யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நாம் மட்டும் சுகமாக வாழ்ந்தாற்போதும் என்று தனனலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எவ்வகையிலும் பிறர்க்குப் பயன்படாது வாழ்வோர் எத்துணைப் பேரறிவும் பேராற்றலும் பெருஞ்செல்வமும் உடையராயினும் அவர்கள் பெற்றுள்ள அறிவும் ஆற்றலும் செல்வமும் முதலாயின உயர்திணை மாந்தராகப் பிறந்துள்ள அவர்தம் மக்கட் பண்பின் வளர்ச்சிக்கோ அன்றி அவரைச் சூழ்ந்துள்ள மக்கட் குலத்தாரது நலவாழ்வுக்கோ ஒருசிறிதும் பயன்படுவதில்லை. இவ்வாறு ஒருவாற்றானும் பிறர்க்குப் பயன்படாத இன்னோரது பேதைமை நிலையினை யெண்ணி இரங்குவதாக அமைந்தது,

'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்
தன்னோய்போற் போற்றாக்கடை' (315)