பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii


பேசிய பேச்சைக் கேட்ட திரு. வி. க. அவர்கள், அப் பேச்சினை விரித்து ஒரு கட்டுரையாக எழுதும்படி பணித்தார்கள். சைவத்திருவாளர் திரு. சச்சிதானந்தம் பிள்ளையவர்களிடமும் சொல்லிநினைவு படுத்தினார்கள். எனினும் பல்கலைக்கழகப் பணிகளுக்கிடையே அதனைச் செய்து முடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தார் கேட்டுக் கொண்டபடி 'அருட்பா அறம்” என்ற வரிசையில் நான்கு நிமிட அளவில் ஆறு பேச்சுக்கள் வானொலியில் நிகழ்த்தப் பெற்றன. சைவத்திருமுறைகளிலும், திருவருட்பாவிலும், உறுதியான ஆர்வமும், ஈடுபாடும், புலமையும் தியான அனுபவமும், ஒருங்கு வாய்க்கப் பெற்ற வடலூர்வாழ் திருவாளர் பழ. சண்முகனார் அப்பேச்சுகளைத் தொகுத்து வெளியிடவிரும்பிக் கையெழுத்துப் படியினை வாங்கிச் சென்றார்கள். இருபது பக்க அளவில் அமைந்த அக்கையெழுத்துப் படியினைக் கண்ணுற்ற மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிறிய அளவில் இதனை வெளியிடுவதைக் காட்டிலும் இக்கருத்துக்களைமேலும் விளக்கித் தனிநூலாக வெளியிடுதலே பயனுடையதாகும் என வற்புறுத்தினார்கள். அவர்களது வற்புறுத்தலுக்கு இணங்க மேலும் பல தலைப்புக்களில் விரிந்த பொருளமைப்பினைப் பெற்று இந்நூல் வெளிவருகின்றது.

இராமலிங்க வள்ளலார் அருளிய திருவருட்பா செந்தமிழ்ச் சொல்வளத்தாலும், ஆழ்ந்த பொருள் நுட்பத்தாலும் ஒப்பற்ற பேரருளின்பக் கடலாகும். அதனை ஆராயப் புகுந்த யான் 'கடலுற்றுண் பெரு நசை ஒரு சுணங்கனையொக்குந் தகைமையேன்', என்பதனை நன்கறிவேன். ஆயினும் சைவத் திருமுறை