பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பசிப்பிணி மருத்துவர்

உடம்போடு கூடிய உயிர்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாயமைந்தது பசியாகும். இது உயிர்கள் கருவாய்ப்பதிந்த நாள் தொட்டு அவ்வுயிரது உடம்பின் உள்ளே நிலைபெற்று, உடல் வளர்ச்சிக்குள்ள உணவினைப் பக்குவப்படுத்திச் செமிக்கச் செய்யும் தீயாகும். உடல் வளர்ச்சிக்கு வேண்டிய உணவினை அவ்வப்பொழுது பக்குவப்படுத்தி நிற்கும் பசியாகிய இத்தீயானது, உரிய காலத்தில், உடலுக்குத் தர வேண்டிய உணவு உரிய காலத்தில் தரப்பெறாத நிலையில் வயிற்றின் உள்ளிருந்து மூண்டு வெதுப்புவது; உயிர்களின் கருவி கரணங்களைத் தளர்ச்சியுறச் செய்தல் இத் தீயின் செயலாகும். எனவே உடம்பொடு கூடிய உயிர்கள் இத்தகைய பசித்தீத் தணிய உரிய காலத்தில் உணவினை உட்கொள்ளுதல் இன்றி யமையாததாயிற்று. உணவினை முதலாகக் கொண்டதே உயிர்கள் பெற்றுள்ள உடம்பாகும். இத்தகைய உணவினைப் பெறவியலாது மக்கள் பசியால் வருந்திய பொழுது அவர்களுக்கு வேண்டிய உணவினைக் கொடுத்தவர்கள், அவர்தம் உடம்போடு உயிரை நிலைத்திருக்கச் செய்தமையால், அவர்கள் உயிர் கொடுததவராகவே மதித்துப் போற்றப் பெறுவர். இங்கு உணவெனப்படுவது நிலமும் நீரும் விரவிய நிலையில் விளையும் நெல் முதலிய தானியங்களும், காய் கனிகள் முதலியனவுமாகும். மக்களுக்கு இன்றியமையாத உணவுப் பொருள்களை