பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


சுற்றத்தின் வறுமையை, புது வருவாயையுடைத்தாகப் பழுத்த மரத்தின் கண்ணே புள்ளினம் ஒலித்தாற் போன்ற ஊணாலுண்டாகிய ஆரவாரந்தானும் இவ்வூர்ப்புறத்தே கேட்கின்றது. பருவந்தப்பாத மழை பெய்யுங் காலத்தைப் பார்த்துத் தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தினை யடையும் மிகச்சிறிய எறும்பினது சிலவாகிய வரிசையை யொப்பச் சோறுடைக் கையினராய் வேறு வேறு போகின்ற பெரிய சுற்றத்தோடும் கூடிய பிள்ளைகளைக் காண்கின்றோம். கண்டு வைத்தும் எம்பசி வருத்தத்தானும் வழிவரல் வருத்தத்தானும் பின்னரும் பின்னரும் விதுப்புற்று (மனத்தின் விரைவுற்று)க் கேளாநின்றேம், பசி நோய் தீர்க்கும் மருத்துவனது மனை அணித்தோ? சேய்மைக்கண்ணதோ? எங்களுக்குத் தெளியச் சொல்லுமின்' என்பது இப் பாட்டின் பொருளாகும்.

ஒருவருடைய இயல்புகளைக் கூறி வாழ்த்துவோர், 'ஆயிரம் வெள்ளம் வாழ்க' என்றது போலத் தம்மனம் விரும்பிய அளவு வாழ்த்துதல் உலகியலிற் பெரும்பாலும் நிகழும் வாழ்த்தியல் முறையாகும். மக்கள் கருவாய்ப் பதிகின்ற அன்றே அவர்களுக்குரிய வாழ்நாளும் வரையறை செய்யப் பெற்றனவாதலின் அதற்கு மேலும் பல் ஆண்டுகள் வாழ்கவென வாழ்த்துதல் நிலைபேறுடைய வாழ்த்தாகாதென எண்ணிய புலவர் சிலர், 'ஊழால் நினக்கு வரையறுக்கப்பட்ட நாள் முழுதும் இனிதாக இருப்பாயாக' என வாழ்த்துதலும் உண்டு. இவ்விரு வகை வாழ்த்துக்களிலும் வாழ்த்துவார்க்கு வரும் இழப்பெதுவுமில்லை. ஆனால் பசிப்பிணி மருத்துவனாக விளங்கிய பண்ணனை வாழ்த்தக் கருதிய கிள்ளிவளவன், தனக்குத் தெய்வத்தால் வரையறுக்கப்பட்ட வாழ்நாட் பகுதியில் இதுகாறும் கழிந்தன போக இனி எஞ்சியிருக்கின்ற நாளையும் பண்ணன் தன்வாழ் நாட்களுடன்