பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191


யுடையளாய் இனிய உணவினைப் பிள்ளைக்கு நல்குவது போலவே, இறைவனது திருவருளாகிய சத்தியும் ஆன்மாக்களின் ஆணவப் பிணிப்பாகிய மலம் கழலுதல் வேண்டிச் சினமுடைய திரோதாயியாக நின்று உயிர்கட்கு வினைப் பயன்களாகிய மருந்தினை மறைத்து உண்பித்து அம்மலநோய் நீங்கிய நிலையிலே பழைய திருவருட் சத்தியாகத் தோன்றிச் சிவபரம் பொருளைக் கண்டு மகிழும் பெற்றியை அளித்தருளும். இவ்வுண்மையினை, 'முற் சினமருவு திரோதாயி கருணையாகித் திருந்திய சத்திநிபாதம் திகழு மன்றே' (சிவப்பிரகாசம்-48) என வரும் திருவிருத்தத்தில் உமாபதி சிவாச்சாரியார் விளக்கி யுள்ளார்.

இவ்விளக்கத்தினை யுளங்கொண்ட இராமலிங்க வள்ளலார், சோதி வழிபாட்டில் எழு திரைகளை அமைத்துள்ளார். தில்லைச்சிற்றம்பலத்தில் சிதம்பர ரகசியத்தினை மறைத்துள்ள திரையானது, தில்லையம் பலத்தில் ஒளியுருவாய்த்திகழும் பரம்பொருளை ஆன்மா காணுதற்குத் தடையாயுள்ள ஆதிசத்தியினைக் குறிப்பதாகும். ஆதிசத்தி பராசத்தி முதலிய சத்திகளாய் ஒன்றன்பின் ஒன்றாய் அமைந்து ஆன்மாவை மறைத்துள்ள திரைகள் ஒன்றன்பின் ஒன்றாக விலக ஆன்மாவானது அப்பாலுக்கப்பாலானாகிய பரம்பொருளை முறையே கண்டு தெளியும் முறையில் இரகசியத்தின் முன்னுள்ள திரையானது தூக்கிக் காட்டப்படுகின்றது. இவ் வுண்மையினை,

'பரைதுாக்கிக் காட்டியகாலே - ஆதி
பரை இவர்க்கப்பால் அப்பால் என்றுமேலே
திரை துக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
சிற்றம்பலத்தே திருநடஜோதி'

(திருவருட்பா 4594)