பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

213


தடையுமின்றி அத்திரு ஞானசபையும் தோன்றி விளங்கச் செய்வித்தருளிய தேவரீர் பெருங்கருணையைக் கருதும் தோறும் பெருங்களிப்படைகின்றோம். இனி, அத்திருஞான சபையை அலங்கரித்தல் வேண்டுமெனக் குறிப்பித்த வண்ணம் அலங்கரிக்கத் தொடங்குகின்றோம். அருட் பெருஞ்சோதி ஆண்டவரே! தேவரீர் அருளுருவாகி எங்கள் அகத்தும், புறத்தும் அமர்ந்தருளி யாங்கள் செய்யும் இவ்வலங்காரத் திருப்பணியில் எவ்விதத்தாலும் யாதொரு தடையும் வாராத வண்ணம் செய்வித்து அவ்வலங்காரத் திருப்பணியை முற்றுவித்தருளல் வேண்டும்.

சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே! அத்திரு வலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் அமர்ந்தருளி அற்புதத் திருவருள் விளக்கத்தால் எங்களையும் இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி, உண்மையறிவை விளக்கி, உண்மை இன்பத்தை அளித்துச் சமரச சுத்த மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை அடைவித்து நித்தியர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும். எல்லாம் உடைய அருட்பெருஞ்சோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் தடையாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும், விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.