பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

231


சாதி சமய சாத்திர வேற்றுமைகளை யெல்லாம் அறவே தவிர்த்து மக்களனைவரையும் ஒருகுலத்தவராகக் காணும் பொதுமை நெறியே சன்மார்க்க நெறியாகும் என்பதனை உள்ளவாறு உணர்ந்து மக்களெல்லாம் சன்மார்க்க நெறியில் ஒழுகி உய்தி பெறுதல் வேண்டும் என உலக மக்களை அறை கூவியழைத்தவர் இராமலிங்க வள்ளலார். இவ்வுண்மை

“சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையுந் தணந்தேன்”

(4075)

"இச்சாதி சமயவிகற் பங்களெலாந் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்”

(4086)

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
     சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே யபிமானித் தலைகின்ற உலகீர்
     அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
     நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர்தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
     மேவுகின்ற தருணமிது கூவுகின்றேன் உமையே

(5566)

"கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
     கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக
மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெறமெய் உலகம்
     வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என்றனக்கே"

(3768)