பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

265


உடம்போடு கூடிவாழும் உயிர்கட்கு அவ்வுடம்பை விட்டு இறத்தலாகிய சாதலைக் காட்டிலும் துன்பந் தருவது பிறிதொன்றுமில்லை என்பார்,

'சாதலின் இன்னாதது இல்லை' (குறள்-230)

என்றார் திருவள்ளுவர். இவ்வாறு சாதலால் வருந் துன்பத்தினை மனவுணர்வு படைத்த மாந்தர்கள் தாம் மேற்கொண்டு செய்யும் தவத்தின் ஆற்றலால் மாற்றி இவ்வுலகில் இறவாநிலையை அடைதல் கூடும் என்னும் உண்மையினை,

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

(குறள்-269)

எனவரும் திருக்குறளில் தெய்வப் புலவர் வற்புறுத்திக் கூறியுள்ளமை காணலாம்.

உலகமக்கள் தாம் செய்யும் தவமுயற்சியால் ஊழையும் வென்று இவ்வுலகில் அழியாது நிலை பேறுடைய உடம்பினராய் நெடுங்காலம் வாழ்தற்குரிய வண்ணம் எண்வகைச் சித்திகளும் கைவரப்பெற்று நிலமிசை நீடுவாழும் நெறியினை உலகினர்க்கு அறிவுறுத்திய பெருமை தமிழ்நாட்டுச் சித்தர் கணத்தார்க்குரிய தனிச் சிறப்பாகும். இத்தகைய சித்தர் கணத்தாருள் குருவாகத் திகழ்ந்தவர் திருமூலத்தேவர் என்பது அறிஞர் பலரும் நன்கறிந்த செய்தியாகும்.

சித்தர்கணத் தலைவராகிய திருமூலர் சிவபெருமானைப் போற்றி அம்முதல்வன் திருவருளால் எண் வகைச் சித்திகளும் கைவரப் பெற்ற சிவயோகிகளாகிய சித்தர்கள் பெற்ற மரணமிலாப் பெருவாழ்வாகிய இறவாப் பெருநிலையினைப் பெறுதற்குரிய நெறி முறையினையும் அந்நெறியாற் பெறுதற்குரிய பயனையும்,