பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278


(4) வேகாக்கால், போகாப்புனல், சாகாத்தலை ஆகியவற்றின் நுட்பத்தினை யுணர்ந்து, எல்லாவற்றையும் விளைவித்தலாகிய சித்தித்திறம் என்னும் நான்குமாகும். இந்நால் வகைப் பொருள்களையும் எல்லாம் வல்ல இறைவனே குருவாக எழுந்தருளி வந்து உபதேசித்து இதுவே நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபாகுமென வள்ளலார்க்கு அறிவுறுத்தி யருளினான் இச்செய்தியினை

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
     தான் என அறிந்த அறிவே
தகும் அறிவும் மலம் ஐந்தும் வென்றவல்லபமே
     தனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்
     விளைய விளைவித்த தொழிலே
மெய்த் தொழிலதாகும் இந்நான்கையும் ஒருங்கே
     வியந்தடைந் துலக மெல்லாம்
மாகாதலுற எலாம் வல்ல சித்தாகி நிறை
     வானவரமே இன்பமாம்
மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்
     மரபென்றுரைத்த குருவே
தேகாதிமூன்றும் நான் தருமுன் அருள்செய்தெனைத்
     தேற்றி அருள் செய்த சிவமே
சிற்சபையில் நடுநின்ற ஒன்றான கடவுளே
     தெய்வ நடராசபதியே

(திருவருட்பா-3678)

எனவரும் பாடலால் வள்ளலார் விளக்கியுள்ளமை காணலாம்.

சாகாத்தலை என்பது-சிவாக்கினி
வேகாக்கால் என்பது-காரணவாயு
போகாப்புனல் என்பது-காரணோதகம்