பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செந்தமிழ்ப் புலமையினைத் துண்டும் திருவருட்பா


அருட்பிரகாச வள்ளலார் பாடிய திருவருட்பாப் பனுவலில் பொதுமக்கள் எல்லோர்க்கும் பொருள் இனிது விளங்கக் கூடிய எளிய தமிழ்ச் சொற்களால் இயன்ற பாடல்களே மிகுதியாக உள்ளன. எளிய சொற்களால் இயன்றும் அரிதின் முயன்று நுண்ணிதின் ஆராய்ந்து உணர்தற்குரிய அரும் பொருட்பாடல்களையும் வள்ளலார் பாடியுள்ளார். உணர்தற்கரிய பொருள்களையும், எண் பொருளவாக எல்லோரும் உணர்ந்து கொள்ளும் படி தெளிந்த சொல் நடையில் விரித்துக் கூறுதலும், கல்வியில் வல்லவர்களே நுண்ணிதின் ஆராய்ந்து உற்றுணரும் முறையில் திட்பமும் நுட்பமும் செறியக் கூறுதலும் ஆகிய இருவகை மொழி நடையும் மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதன. இவற்றுள் எளிய நடையானது சொல்வோரது சொல்வன்மையை வளர்க்குந் தன்மையது. அரிய நடையானது கேட்போரது சிந்தனையைத் தூண்டி அவர்க்கு உய்த்துணரும் ஆற்றலை மிகுவிப்பதாகும். எனவே சொல்வோர், கேட்போர் என்னும் இருதிறத்தாருடைய உணர்வினையும் விரிவடையச் செய்யும் நிலையில் எளிய சொல்நடையும் அரியசொல் நடையுமாகிய இருவகை மொழி நடைகளும் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதனவே