பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


தனிமுதற்பொருளை வழிபடும் சைவசமயத்தினரால் சோதிப்பொருளாகிய இறைவனது இயல்பினை எல்லார்க்கும் புலப்படுத்தும் நிலையில் அமைக்கப் பெற்ற இத்தெய்வசபையின் அமைப்பினையும் இதனைக் கண்டு அமைத்த சைவசமயத்தின் சிறப்பினையும் அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது,

'சைவ சமயமே சமயம் சமயா தீதப் பழம்பொருளைக்
கைவந்திடவே மன்றுள் வெளி காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
பொய்வந் துழலும் சமய நெறி புகுதல் வேண்டாம் முத்திதரும்
தெய்வச் சபையைக் காண்பதற்குச் சேரவாரும் செகத்தீரே'

எனத் தாயுமானார் அருளிய திருப்பாடலாகும். அப் பெருந்தகையார் அருளிய வண்ணம் சமயாதீதப்பழம் பொருளாகிய இறைவனை ஞானப்பொதுவில் ஆடல் புரிவோனாகக் கண்டு வழிபடும் தெய்வசபையினையே அருட்பிரகாசவள்ளலார் உத்தரஞான சிதம்பரமாகிய வடலூர்ப் பெருவெளியில் 1879 ஆம் ஆண்டில் நிறுவியருளினார்கள். வள்ளலார் நிறுவிய தெய்வசபையில், இயற்கை உண்மைத் தனிப்பெரும் பொருளாய், இயற்கை விளக்கத் தனிப்பெரும் பதமாய், இயற்கை இன்பத் தனிப் பெருஞ்சுகமாய்ப் பிரிவின்றி. நிறைந்த தன்மையராகிய அருட்பெருஞ்சோதி ஆண்டவரது வழிபாடு எல்லாச் சமயத்தார்க்கும் உரிய பொது வழிபாடாக நிகழ்ந்துவருவது இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.

அருட்பெருஞ்சோதி - அருட்பெருஞ்சோதி,
தனிப்பெருங்கருணை - அருட்பெருஞ்சோதி,