பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

'சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே'

எனவரும் திருவாசகத் தொடரும் இப்பொருளில் ஆளப் பெற்றுள்ளமை காண்க.

'இரந்திரந்துருக என் மனத்துள்ளே எழுபரஞ் சோதியே’

என வரும் திருவாசகம் உயிர்களின் உள்ளத்தெழும் சோதியாய் இறைவன் விளங்கும் திறத்தைச் சுட்டி நிற்றல் காண்க. அன்பினாற் கசிந்துருகும் நெஞ்சத்தினராகிய அடியாருள்ளத்திலும் ஞானமயமான அம்பலத்திலும் ஒளியே பெருக எல்லாம் வல்ல இறைவன் எழுந்தருளியுள்ளான் என்பதனை,

'உருகுதலைச் சென்ற உள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே,
பெருகுதலைச் சென்று நின்றோன்'

எனவரும் திருச்சிற்றம்பலக் கோவையாரில் மணிவாசகப் பெருந்தகையார் விளக்கியுள்ளார்.

உலகில் உள்ள ஞாயிறு, திங்கள், தீ, விண்மீன்கள் ஆகிய சுடர்களுக்கெல்லாம் ஒளி வழங்குவது இறைவன் திருவடியாகிய அருள் ஒளியே என்பதனை,

'மெய்ச் சுடருக் கெல்லாம் ஒளிவந்த பூங்கழல்
உத்தர கோச மங்கைக் கரசே'

என வரும் தொடரால் திருவாதவூரடிகள் விளக்கியுள்ளமை காணலாம்.