பக்கம்:திருவாசகத்தேன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 97


மாணிக்கவாசகரின் அனுபவம் மலங்களின் ஆற்றல் அடங்கிய நிலை; ஒடுங்கிய நிலை; உய்யும் நெறியில் செல்லும் நிலை. ஆன்மாவில் வந்து பொருந்தும் குலம்களையப் பெற்றுவிட்டது; குற்றங்களும் களையப்பட்டு விட்டன. இவையிரண்டும் அற்ற நிலையே நன்னிலை தான்! ஆயினும், நிறைநலம் சார்ந்த பக்குவம் அல்ல. அதனால் மாணிக்கவாசகர் தன்னைக் கைவிடாது அருள்பாலிக்கும்படி வேண்டுகின்றார். என் மலங்களின் ஆற்றல் வலியது. ஒரு சிறு இடுக்கில் கூட நுழைந்துவிடும். பழக்கவாசனை பொல்லாதது. அதனாலேயே பழக்கம் தவிரப் பழகுமின் என்றார்கள்.

இறைவனே! சிவனே! அனைத்துயிர்களுக்கும் மங்கலம் செய்பவனே! ஆணவத்திலிருந்து என்னை மீட்டு எடுப்பாயாக! என்னை ஆணவம் இயல்பாகப் பற்றியது! அதாதியிலேயே பற்றியது! நானும் ஆணவத்துடன் இரண்டறக் கிடந்துழல்கின்றேன்! இறைவா நீ, என்னை ஆணவத்திலிருந்து மீட்க மாயையைக் கொண்டு இயற்றிய உடல் கொடுத்தனை! மாயையை விளக்காகக் கொண்டு அந்த ஒளியில் கரையேறுமாறு பணித்தனை! ஆனால், நானோ மாயையில் கட்டுண்டு அதுவே சொர்க்கம் என்று கிடந்துழல்கின்றேன். சாதனத்தைச் சாத்தியம் என்று எண்ணி மயங்கிக் கிடக்கின்றேன். எந்த ஒரு தீமையும் நன்மையின் வழியிலேயே மறையும்; மறைய வேண்டும். இது நியதி. அதனால் நீ எனக்கு நல்வினைகள் செய்தலுக்குரிய அறியும் கருவிகள்—— செய் கருவிகளைத் தந்தருளினை. ஆனால் நானோ தீவினையே பெருக்கி வாழ்கின்றேன்! இறைவா உன்னுடைய திருவருட் சக்தியே என் பொருட்டுத் திரோதான சக்தியாக உருக்கொண்டு மறத்தல் செய்யினும் நான் நினைவுப் புலனை மேலும் ஆழமாக இயக்கி மறக்க வேண்டியவற்றை மறக்காமல் வன்கண்மை கொண்டு வல்வினை செய்து வாழ்கின்றேன். ஆக, நான் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம்,

தி-7