பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


ஏகனே! நின் கழலிணை அல்லாமல் வேறு பற்றுக்கோடு எதுவும் எனக்கில்லை.'

‘இந்திர லோகத்தை விழைந்திலேன் என்றாலும் நான் விழைவது ஒன்றுண்டு. உள்ளம் உருகி உடம்பு நைந்து, கைகள் இரண்டும் தலைமேற் குவிய, கண்கள் ஆறாகப் பெருகவேண்டும். இதுவே என் வேண்டுகோள்’ என்றவாறு,


77.

ஐய நின்னது அல்லது இல்லை
      மற்று ஓர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்தது அல்லது இல்லை
      பொய்ம்மையேன் என் எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க
      வந்து நின் கழல்கணே
மெய் கலந்த அன்பர் அன்பு
      எனக்கும் ஆக வேண்டுமே 73


‘ஐயனே! நின் திருவடிக்கண் அன்றி மற்றோர் பற்று இல்லை என்பதை அறிந்திருந்தும் வஞ்சகனும், பொய்யனுமாகிய யான் நின்மாட்டு உண்மை அன்பு செலுத்தவில்லை. மெய் கலந்த அன்பருடைய அன்பு, எப்படி உன்னிடம் கொண்டுசேர்க்கும் உபாயமாக உள்ளதோ, அந்த அன்பை எனக்குத் தந்தருள வேண்டும்’ என்கிறார்.


78.

வேண்டும் நின் கழல்கண் அன்பு
      பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே
ஆண்டுகொண்டு நாயினேனை
      ஆவ என்று அருளு நீ
பூண்டுகொண்டு அடியனேனும்
      போற்றி போற்றி என்றும் என்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து,
     மன்ன நின் வணங்கவே 74