பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 219


அவ்வினாவிற்கு விடை கூறுவார்போல 'உண்மைதான்! கண்ணாலும் கருத்தாலும் காணப்படுகின்ற இப்பிரபஞ்சத்திற்கு முன்னரே ஒரு பழம்பொருள் இருந்தது; இருக்கின்றது; என்றும் இருக்கும் என்கிறார். இப்பிரபஞ்சம் ஒரு காலத்தில் இல்லாமலிருந்தது; இப்பொழுது இருக்கின்றது; என்றோ ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும். அதாவது தோற்றம், இருப்பு, மறைவு ஆகிய மூன்று இயல்புகளும் பிரபஞ்சத்திற்கு இயல்பு. இந்த மூன்று இயல்புகளும் இல்லாத ஒரு பழம்பொருளும் உண்டு. இதனைக் குறிப்பிடவே ‘முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே’ என்றார்.

என்றோ ஒரு காலத்தில் தோன்றிய பிரபஞ்சம் நாள்தோறும் புதுமைகள் பல பெற்று விளங்குகிறது. வளர்ச்சி என்பதே புதுமைதான். விரிந்து செல்கின்ற பிரபஞ்சத்தில் பூமி, கதிரவன் போன்ற கோள்கள் நேற்று இருந்த இடத்தில் இன்று இல்லாமல் இடம் மாறி விரிந்து கொண்டே செல்கின்றனவே, அதுவும் புதுமைதானே! இந்தப் புதுமைகளைத் தொடர்ந்து தோற்றுவிக்கின்ற கர்த்தா, புதுமைக்கும் புதுமையன் என்று பேசப்படுகிறான். அவன் என்றும் ஒருநிலைப்பட்டவனாகவே உள்ளான். என்றும் வளர்கின்ற புதுமையிலும் அவன் இடம் பெறுகிறான். ஆதலால், 'புதுமைக்கும் அப்பெற்றியனே’ என்றும் கூறுகிறார்.

‘உறைசேரும்' என்று தொடங்கும் திருவீழிமிழலைப் பதிகத்தில் காழிப் பிள்ளையார் இக்கருத்தைச் சற்று விளக்கமாகவே பேசுகிறார். ‘நிறைசேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிராய், அங்கங்கே நின்றான்’ (திருமுறை: 1-132-4) என்று சொல்லுகின்றார். நிறைசேரப் ‘படைத்து’ என்பதால் படைக்கப்பட்ட பழைய பொருள்களுக்கு முன்னே உள்ளான் என்பது பெற்றோம். ‘உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான் என்று கூறியதால்