பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 247


இவ்வளவு நிகழ்ந்த பின்னர், 'இளம் வயதுடைய எங்கள் தோழியை ஒரு விநாடி நேரத்தில் இப்படி ஒருவன் ஆக்கினான்’ என்றால், அவன், பேர்அரையனாகவே இருத்தல் வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இப்படி இவளைப் பித்தியாக ஆக்கியிருக்க முடியாது. இந்த மாபெரும் செயற்கு அரிய செயலைச் செய்த அவன், ஒரு வித்தகனாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற முடிவிற்கு வந்தனர்.

170. முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன் அம் சிலம்பில் சிலம்பித் திருப் புருவம்
என்னச் சிலை குலவி நம்தம்மை ஆள் உடையாள்
தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய் மழை ஏல் ஓர் எம்பாவாய் 16

சுருக்கி-வற்றச்செய்து. உடையாள் என்ன-எம்மை உடைய உமையம்மையின் திருமேனியின் நிறம் போல. இட்டிடை-மிகச்சிறிய இடை. பொன்னஞ் சிலம்பு-பொன்னாலாகிய சிலம்பு. சிலம்பி-ஒலித்து. சிலை குலவி-வில்லை வளைத்து. முன்னி-முதலில்.

சங்கப் பாடல்களில் காணப்பெறும் தைந் நீர் ஆடலிலும், மகளிர் மழையை வேண்டிநிற்கும் பகுதி காணப்பெறுகிறது. அப்பாடல்களின் வளர்ச்சியே திருவெம்பாவை ஆதலின், இதிலும் மகளிர் மழை வேண்டிநிற்கும் பாடல் இடம்பெறுகிறது.

திருவண்டப் பகுதியில் மாபெரும் உருவகம் ஒன்றைச் செய்த மணிவாசகர் என்ற மாபெருங் கவிஞர், இப்பாடலில் மழையைமட்டும் இறைவியோடு உவமை செய்கின்றார். உலகில் உயிர்களை மழை புரத்தல்போல