பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 249


இவ்வெண்ணத்தின் முடிவில் மழை நினைவுக்கு வருகின்றது. நல்லவர், தீயவர், உடையவர், இல்லாதவர் என்ற வேறுபாடின்றி நன்கு பொழிந்து மக்களை உய்விக்கின்ற அந்த மழையின் தன்மை நினவுக்கு வருகின்றது.

இப்பாடலில் அப்பெண்கள் அனைவரும் ஒருசேரத் தம்மையும் தன்னலத்தையும் மறந்துவிட்டனர். அதன் பயனாகவே பாடலின் இறுதியில் மிக நுண்மையான ஒரு கருத்து பேசப்பெறுகிறது. வேறுபாடு பாராட்டாமல் அனைவருக்கும் பொழிகின்றது மழை, இது மழையின் தனிச் சிறப்பாகும். இந்த நினைவு வந்தவுடன் அன்னையின் அருள் வேறுபாடின்றி அனைவரையும் புரத்தலின் மழை அருளுக்கு உவமை ஆகிறது. அதனாலேயே, “அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய்” என்று பாடுகின்றனர். இப்பாடல் முழுவதிலும் தம்மைப் பற்றிய நினைவு எதுவும் இல்லாமல், எல்லா உயிர்களும் அவள் அருளைப் பெற்று உய்ய வேண்டும் என்ற பிறர் நலம் பேணுவதைக் காண முடிகின்றது.

இன்னருளே என்னப் பொழியாய் என்பதில் 'என்ன' என்பதை உவம உருபு ஆக்காமல் 'என்று சொல்லும் படியாக’ என்று பொருள் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அன்னையின் இன்னருள் என்று சொல்லும் படியாக மழையே பொழிவாய் என முடிக்கலாம்.

மேலோட்டமாகப் பார்ப்பவர்கட்கு இந்த உவமையில் ஒரு சிறு குறை தோன்றாமல் இராது.

வேறுபாடின்றிப் பொழிந்தாலும் மழை ஆக்கல், அழித்தல் என்ற இரண்டையும் செய்கின்றது. ஆழ்ந்து சிந்தித்தால் அந்த அழிவும் பின்னர் நலத்தைப் பயப்பதாகவே உள்ளது. மழைநீர் வெள்ளமாக வந்து வயலில் நின்றுவிட்டால் அதன் அடியிலுள்ள பயிர் அழிவது உறுதி.