பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 267


175. செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பு அரிய
பொங்கு மலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள் சோலைத் தென்னன் பெருந்துறையான்
அம் கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும்
அம் கருணை வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் 1

இடந்து-தோண்டியும். எம் தரம்-எங்கள் அளவு. தெங்கு-தென்னை. அங்கணன்-அழகிய நெற்றிண்ணையுடையவன். அந்தணன்-குருவாக எழுந்தருளிய அந்தணன். அறைகூவி-வலிய அழைத்து.

செங்கண் நெடுமால் என்றமையின் மிகக் கூர்மையான பார்வையும் நெடிதான வளர்ச்சியும் பெற்றவன் என்பது பெற்றாம். செங்கண்ணை உடைய ஒருவன் இருந்த இடத்தில் இருந்தே எதிரேயுள்ளதைக் காணும் வாய்ப்பு உடையவன் என்றாலும் இவனைப் பொறுத்தமட்டில் இருந்த இடத்திலிருந்தும் காணமுடிய வில்லை; நெருங்கிச் சென்றும் காணமுடிய வில்லை; நிலத்தை அகழ்ந்தெடுத்தும் காணமுடியவில்லை என்ற அழகு தோன்றுச் 'சென்று இடந்தும் காண்பு அரிய' என்றார்.

பூமிக்குள் ஆழ்ந்து நிற்கும் பாதத்தைப் 'பொங்கு மலர்ப்பாதம்’ என்று அடைகொடுத்துக் கூறியது வியப்பேயாகும். பூமியை அகழ்ந்துகொண்டு உள்ளே சென்றமையின் மிக வன்மையான பாதம்போலும் என்ற நினைவு தோன்றாதிருக்க ‘மலர்ப்பாதம்’ என்றார். பாதாளம் ஏழினும் கீழ்ச் சென்றிருக்கும் பாதத்தை, 'பொங்கு பாதம்' (ஒளியுடைய பாதம்) என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? ஒளிக்கெல்லாம் மூலமாய் இருப்பதாலும் அருக்கனுக்கே சோதி அமைத்ததாலும் அப்பாதத்தை ஒளியுடைய பாதம் என்றார். இந்தக் கருத்து