பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 271


குருவானவர் முதலில் என் உள்ளம் புகுந்தார். பின்னர்த் தன் பரிசு, வினை இரண்டு, சாரும் மலம் மூன்றும் என்னை விட்டு நீங்கும்படியாகச் செய்தார். அதனாலேயே யாராலும் காண்டற்கு அரியவனை, பேராளனை, தென்னன் என்றும் பெருந்துறையான் என்றும் எமக்கு எளியவனாக எம் எதிரே அமர்ந்துள்ளான் என்றும் தெரிந்துகொண்டேன்’ என்கிறார்.

சென்ற பாடலிலும் இப்பாடலிலும் பின்னரும் பல இடங்களிலும் இறைவனைத் ‘தென்னன்’ என்று அடிகளார் குறிப்பிடுவது சிந்திக்கற்பாலதாகும். வேதகாலத் திற்கு முற்பட்டே சிவ வழிபாடு தமிழகத்தில் தோன்றி வளர்ந்தது. ஆதலின், ‘தென்னன்’ என்ற சொல் சிவபெருமானைக் குறிப்பதற்குக் காரணத்தோடு சொல்லப்பட்ட பெயராகும்.

‘அலைகடல்வாய் மீன் விசிறும்' என்ற தொடர் திருவிளையாடல் புராணத்தில் காணப்பெறும் ‘வலைவீசிய படலக்' கதையை நினைந்து கூறியதாக இருக்கலாம்.

177. இந்திரனும் மால் அயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவன் அவனி வந்தருளி
எம் தரமும் ஆட்கொண்டு தோள் கொண்ட நீற்றன் ஆய்ச்
சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான்
பந்தம் பறிய பரிமேல் கொண்டான் தந்த
அந்தம் இலா ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் 3

அந்தரம்-ஆகாயம். அவனி-பூமி. எந்தரமும்-எமது நிலையிலும். சிந்தனை-கவலை. பந்தம்-கட்டு, பரிய-நீங்க. பரி. குதிரை.

இந்திரன், மால், அயன், வானோர், ஏனோர் என்பவை பொதுவாக மேலுலகம் என்ற பொருளைத் தந்துநிற்கு மேனும், ஒரு காரணம்பற்றியே அடிகளார் இங்கு வரிசைப்படுத்திக் கூறுகிறார்.