பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


எப்பொழுதும் மறைந்திருக்கும் இறைவன், ஓயாது உள்குவார்க்குமட்டும் வெளிப்பட்டு, அவர்களே உணரு கின்ற நிலையில் உள்ளே இருப்பான். அவன் இருக்கின்றான் என்பதைக் கணந்தோறும் அவர்கள் உணரமுடியும், அதைத்தான் 'உள்ளிருக்கும் உள்ளானை’ என்று கூறினார் அடிகளார்.

ஏனையோர்க்கு உள்ளத்துள் மறைந்து நிற்கும் இறைவன் ஓயாது உள்குவார்க்கு அவர்கள் உணருமாறு வெளிப்பட்டுள்ளான். ஆதலின் இவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்கின்றது. உயிரைப் பற்றி நிற்கும் அச்சம் இவர்களைப் பொறுத்தமட்டில் ஓடி மறைந்துவிடுகிறது. இவர்கள் பார்வையில்பட்டவர்கள், இவர்களை நெருங்கித் தொண்டு செய்பவர்கள் ஆகிய அனைவருக்கும் மாபெரும் சிறப்புக்கள் வந்து எய்துகின்றன.

அடுத்து உள்ளது ‘சேயானை’ என்ற சொல்லாகும். ஓயாது உள்குவார்க்கு உள்ளத்தின் ஆழத்தில் அவர்கள் உணருமாறு வெளிப்பட்டு நிற்கின்ற ஒருவன், உள்காதவர் உள்ளத்தில் சேயானாய் (துரத்தில் இருப்பவனாய்) ஆகிவிடுகிறான்.

ஒருவனே ஒரு சிலருக்கு நெருங்கியவனாகவும் ஒரு சிலருக்குச் சேயானாகவும் எப்படி இருக்கமுடியும் என்ற ஐயத்தைப் போக்கிக்கொள்வது எளிது.

தூரத்தே இருக்கும் பொருள்களை அண்மைப் படுத்திக் காண்பதற்குப் 'பைனாக்குலர்' (Binocular) என்ற கருவியைப் பயன்படுத்துகிறோம். இதில் கண்வைத்துப் பார்க்கும் பகுதி சிறிதாகவும் பொருளைக் காட்டும் எதிர்ப்பகுதி பெரிதாகவும் இருப்பதைக் காணலாம். சிறிய பகுதியைக் கண்ணில் வைத்துப் பார்க்கும்போது நூறடி தூரத்திற்கு அப்பாலுள்ள பொருளும் ஒரு அடி தூரத்தில் நெருங்கி இருப்பதுபோலக் காட்சி தரும். இதே