பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 293


மண் சுமக்கும் வடிவம். இந்தக் கருணையை நினைந்து பார்க்கின்றார் அடிகளார். ஆலவாய்ச் சொக்கனுக்கு இந்தப் பெருங்கருணை தோன்ற யாது காரணம் என்று நினைக்கின்றார். புதிதாகத் தகுதி ஒன்றும் மூவருக்கும் வந்துவிடவில்லை. எனவே, சொக்கன் தோன்ற உடனிருக்கும் தாயின் பரிவே காரணம் என்ற நினைவு தோன்றியதால்தான் இவ்வாறு பாடுகிறார். அவன் பெம்மான், விண்சுமந்த கீர்த்தி உடையான், வியன் மண்டலத்து ஈசன், கண்சுமந்த நெற்றிக் கடவுள் என்றாலும் அவன் கூலி ஆளாய் வருவதற்கு இவையல்ல காரணங்கள். பெண் சுமந்த பாகத்தானாய் இருப்பதே அவன் கருணைக்குக் காரணம் என்ற கருத்துப்படப் பெண்சுமந்த பாகத்தன்' என்று பாடுகின்றார்.

மண் சுமந்து கூலி கொண்டு, மண் சுமந்த கூலி கொண்டு என்று இருவகைப் பாட வேறுபாடுகள் உள்ளன. ‘சுமந்து’ என்ற வினையெச்சத்தைக் காட்டிலும் ‘சுமந்த’ என்ற பெயரெச்சமே சிறப்புடையதாகத் தெரிகிறது.

சுமந்த கூலி என்னும்பொழுது ஒரு சிறந்த கருத்தை அது கொண்டு நிற்பதைக் காணலாம். இறைவன் படைப்பில் எந்த ஒன்றைப் பெறவேண்டுமாயினும் அதற்குரிய விலையைத் தந்தே தீரவேண்டும். அவனுடைய கருணை ஒன்றுக்குத்தான் விலையில்லை. இங்கே வந்தியம்மையிடம் நிரம்பப் பிட்டை வாங்கிக்கொண்டு தின்றுவிட்டு மூட்டையும் கட்டிக்கொண்டு சென்றானே, இது முறையா? ஏழைப் பிட்டு வாணிச்சியிடம் இறைவனே ஆயினும் பிட்டைப் பெறுவது முறையா என்ற வினாவிற்கு விடை கூறுவார்போல இது இலவசமாகப் பெற்றதன்று, மண் சுமந்ததற்காகவே பெற்ற கூலியாகும் என்று பொருள்பட நிற்றலின் இப்பாடமே இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.