பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


உள்ளத்தில் குடிகொண்டிருப்பவன் என்பதே இதன் பொருளாகும். முற்றிலும் தம்முடைய உள்ளத்தைத் தம் பணி செய்யும் கருவியாகக் கொள்ளாமல் வார்கழல் வந்து தங்குவதற்குரிய இடமாக முற்றிலும் செய்துவிட்டால் அக்கழலுக்கு உரியவனும் அங்கே வந்து தங்கிவிடுவான் என்ற பொருளையும் தந்துநிற்கின்றது. அடிகளார் ஈடு பட்டது வார்கழலிலேயே ஆகும். வார்கழலில் தொடங்கிய அந்த ஈடுபாடு, வெகுவிரைவில் அக் கழலுக்குரியவன் அவருடைய உள்ளத்தில் வந்து தங்குமாறு செய்துவிட்டது. அதே வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் தம் அனுபவத்தை அடிகளார். இங்கே பேசுகிறார்.

‘அப்பாலைக்கு அப்பால்’ என்று அடிகளார் கூறுவதில் ‘அப்பால்’ என்ற சொல் இருமுறை பயன்படுத்தப்பெறுகிறது. அப்பால் என்று கூறினாலேயே அது, சொல், கருத்து, கற்பனை என்பவற்றைத் தாண்டி நிற்பது என்ற பொருளைத் தரும். அப்பால் என்ற சொல், இட அடிப்படையில் பார்த்தால் பருப்பொருளாக இருக்கின்ற பிரபஞ்சத்திற்கு அப்பால் என்ற பொருளையும் தரும். கால அடிப்படையில் பார்த்தால் முடிவில்லாத காலத்தைக் குறிக்கும். எனவே சொல், கருத்து, கற்பனை என்பவற்றைக் கடந்து, பிரபஞ்சத்தைக் கடந்து, முடிவிலாத காலத்தையும் கடந்து இருக்கின்ற ஒரு தன்மையையே ‘அப்பாலைக்கு அப்பாலை' என்று குறிக்கின்றார். அடிகளார்.

186. 

மைப் பொலியும் கண்ணி கேள் மால் அயனோடு இந்திரனும்
எப் பிறவியும் தேட என்னையும் தன் இன் அருளால்
இப் பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்து
மெய்ப் பொருட்கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய்
எப் பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும்
அப் பொருள் ஆம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்