பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


தொழிற்படும்போது ஓடுதல் என்ற தொழில் நடைபெறுவதாகக் கூறுகிறோம். உறுப்புக்களின் பெயர்கள் குறிப்பிடப்பெறாவிடினும் ஓடுதல் என்று கூறினவுடன் அல்லது செய்தல் என்று கூறியவுடன் கால்களோ அல்லது கைகளோ பயன்பட்டன என்பதை அறிகிறோம் அல்லவா? இந்தக் கை, கால்கள் தாமே செயல்படுமாறு இல்லை, மூளையில் தோன்றும் உந்துசக்தி நரம்பின் வழியே கை கால்களுக்கு இத்தொழிலில் ஈடுபடுமாறு ஆணையிடுகிறது. இந்த உறுப்புக்களின் செயல்களைமட்டும் கண்டுவிட்டு மூளையுள் தோன்றிய உந்துசக்தியை அறிகிறோம் அல்லவா?

அதன் எதிராகப் பக்தி மீதூர்ந்த நிலையில் நிற்கும் ஒருவருடைய உடல் நடுங்குகிறது; வியர்வை துளிர்க்கின்றது; நாக் குழறுகிறது; கண்ணீர் வருகின்றது. ஒரே நேரத்தில் செயல்கள் நடைபெற்றாலும் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை அல்ல. இந்த நிலையில் அறிவின் நிலைக்களனாகிய மூளை தொழிற்படவில்லை. அதாவது மூளை உந்துசக்தியாகவும் இல்லை; ஒருங்கிணைக்கவும் இல்லை.

என்றாலும், மெய் நடுங்குதல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றனவே! கண்ணீர் ஆறாகப் பெருகுகின்றதே! எந்த ஒரு பொருளையும் கண்ணால் கண்டோ காதால் கேட்டோ இச்செயல்கள் நடைபெறவில்லை. கண்கள் மூடி உள்ளன. புறத்தே எழும் ஒலியும் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. புற உடம்பில் இத்தனை செயல்கள் நடைபெற்றாலும் அறிவின் செயற்பாடு இல்லை; மூளையின் அதிகாரம் இங்கு இல்லை என்று கூறி விட்டோமே. அப்படியானால் இந்தச் செயல்களுக்கு மூலமாக இருப்பது எது?