பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 371


உள்ளக்கிடக்கை மிக உயர்ந்ததாகவும் இருக்கலாம். எனவே, ஏத்தல், இகழ்தல் என்ற இரண்டையும் தாங்கிவரும் சொற்கள் பொருளற்றனவாகி விடுகின்றன. இதனை மனத்திற் கொண்டுதான் அருணகிரிப் பெருமான் ‘முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்’ (கந்த. அல: 22) என்று பாடுகிறார்.

இக்கருத்தை மனத்திற் கொண்டு பார்த்தால் அடிகளாரின் பாடலுக்குப் புதிய விளக்கம் கிடைக்கின்றது. ‘என் பிழைக்கே இரங்கி வேசறுவேன்’ என்பது சதாசர்வ காலமும் அவருடைய அகமனத்தில் இருந்த எண்ணமாகும். ஆனால், அவருடைய வாய்மட்டும் சில நேரங்களில் ஏத்திற்று. இந்த நிலையில் பாடலுக்குப் பின்வருமாறு பொருள் கூறவேண்டும். ஐயனே என் ஆழ் மனத்தில் இடைவிடாமல் என் பிழையை எண்ணிக் கழிவிரக்கம் கொண்டு இனி என்னே உய்யுமாறு என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். அந்த ஆழ்மனத்தோடு தொடர்பு இல்லாமல் வாயளவில் ஏசலும் ஏத்தலும் நடை பெறுகின்றன. எனவே, இவற்றைப் பொருட்படுத்தாமல் பிழைக்கு இரங்கி வேசறும் என்னை விட்டுவிடாமல் காப்பாயாக’ என்று பொருள்கூறுதலும் ஒரு வகையாகும்.

அடிகளாரின் உளப்பாங்கை அறியவும், திருப்பெருந்துறை அனுபவத்திற்குப் பிறகு அவர் வளர்ச்சி முறையை அறியவும் நீத்தல் விண்ணப்பம் பேருதவி புரிகின்றது என்பதை மனத்துட் கொண்டு மறுபடியும் நீத்தல் விண்ணப்பத்தைப் படிப்பது நலம்.

திருவெம்பாவை

திருவெம்பாவைபற்றிய சில செய்திகள் முன்னரே தரப்பெற்றுள்ளன. இந்த இருபது பாடல்களையும் ஒரே நேரத்தில் வரிசையாகப் படித்தால் அதிலொரு புதுமையைப் காணமுடியும்.