பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 67


இல்லை என்பதை அறிவுறுத்தினார். தாய்போன்று இன்னருள் சுரந்தான் அவன்; அதற்கு நன்றி பாராட்டும் இயல்பும் தம்பால் இல்லை என்றாராயிற்று.

இழிந்த பிறவியாகிய நாயிடம்கூடக் காணப்படும் நல் இயல்புகள் இல்லாத தாம் வாழ்ந்து பயனில்லை. தீயில் வீழ்ந்தோ, மலையில் உருண்டோ, கடலில் புகுந்தோ தம்மை மாய்த்துக்கொள்ளவும் இல்லை என்கிறார் அடிகளார்.

44.

வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும்
      அதுதனை நினையாதே
மான் நிலாவிய நோக்கியர் படிறிடை
      மத்துஇடு தயிர்ஆகித்
தேன் நிலாவிய திருஅருள் புரிந்தஎன்
      சிவன்நகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஒம்புதல் பொருட்டுஇனும்
       உண்டுஉடுத்து இருந்தேனே 40

வேனில்வேள்-மன்மதன். மதிசுடும்-குளிர்ந்த மதியும் வெய் தாய்ச் சுடும். படிறு-வஞ்சகம்.

திருப்பெருந்துறையில் குருவின் எதிரே அமர்ந்திருந்து, குரு மறைந்தபொழுது மறைந்துவிட்ட அடியார்களை நினையுந்தொறும் தாம் அவர்களைப்போல் இல்லையே என்ற வருத்தம் அடிகளார் மனத்தில் அடிக்கடி ஊசலாடுகிறது.

இந்நிகழ்ச்சி நடைபெற்றுச் சில காலம் சென்ற பின்னர், திருவாசகம் பாடப்பெறுவதற்காகவே குரு தம்மை இங்கு இருத்திச் சென்றார் என்பதை நன்கு அறிந்திருந்தும், அந்த அனுபவத்தை மறுபடியும் பெறாத ஒவ்வொரு விநாடியும் வீண் காலம் என்று வருந்துகிறார் அடிகளார். இடைக்காலத்தில் ஏனைய நாட்களைப் போல உண்டு