உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்று காந்திஜி எச்சரித்தார்!
இன்று நேருஜி எச்சரிக்கிறார்!

அண்மையில் நடந்த பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தின் போது, குடியரசுத் தலைவரின் உரைமீது சபையில் நடந்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய பாரதப் பிரதமர் நேருஜி, பொது மக்களின் கவனத்தைக் கவரும் வகையில் அற்புதமான கருத்துக்கள் பலவற்றைத் தெளிவுபடுத்தினார். அவரது உரையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரிவினைக் கொள்கையை முழு மூச்சோடு எதிர்த்துப் பேசிய பேச்சு, மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கிறது. “இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடு கேட்கிறது தி. மு. கழகம். இந்தக் கோரிக்கை, அடிப்படையிலேயே தவறானதாகும். ஒவ்வொரு இந்தியரும் இக்கோரிக்கையை மிகத் தீவிரமாக எதிர்க்க வேண்டும்,” என்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்த தலைமை அமைச்சர், பின்னர் தம் குரலை உயர்த்தி அழுத்தம் பதித்துப் பேசியதாவது: “... ஏற்றுக் கொள்ள முடியாத சில கோரிக்கைகளும் நாட்டில் உண்டு, போர். என்றால் போர்தான். ஆனால், போரை நாம் ஒருபோதும் ஏற்கமுடியாது. தி. மு. கழகத்தவருக்கு வேறு சில கட்சிகள் துணையாக நின்று ஆதரவு கொடுப்பது தீவினைப் பயனாகும்; தீவினை பயப்பதுமாகும். தேர்தல் காலத்தில் தலைவிரித்தாடிய ஜாதி வெறி, வகுப்புவாதம் போன்ற தீயபண்புகளைத் தூண்டிவிட்ட குறுகிய புத்தியைக் கொண்ட இக் கட்சிகளின் மனப் பான்மையைத் தடுத்து நிறுத்தாமல் விட்டுவிடுவோமானால், நாட்டின் ஐக்கியம் பாழ்பட்டுப்போக நேரிடும். எனவே, இம்மாதிரியான தீயகொடுமைச் சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும்!”