உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ் எங்கே?
தேவநாகரி எங்கே?

சீர் நிறைந்த தெய்வத் தமிழ் நாட்டின் இன்றைய நடப்பு நிலையை எண்ணிப் பார்க்கும் பொழுது, தமிழுணர்ச்சி பொங்கித் ததும்பி நிற்பதைக் காண்கிறோம்; தமிழ் இன உணர்வும் தமிழ் நாட்டுப் பற்றும் இடைவெளி ஏதுமின்றி நெருங்கிப் பிணைந்து நிலவி வருவதையும் நாம் உணர்கின்றோம். இத்தகைய உயிரூட்டம் தரும் சிறப்பியல்புகளால்தான் நம் நாடும், மொழியும் மென் மேலும் வளர முடியும். அவ்வளர்ச்சியின் அடித்தளத்தில் தான் - தமிழக மக்களின் வாழ்வும், வளப்பமும், பொலி வெய்தத்தக்க ஆரோக்கியமான சூழலும் உருவாகிப் பலப்படக்கூடும்.

“தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்,” என்று தம் ஆர்வக் கனவைக் கோடிட்டுக் காட்டப் புகுந்த புதுமைக் கவிஞர், “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்,” என்ற விண்ணைத் தொடும் இலட்சியத்தையும் சேர்த்து வைத்துத் தமிழ் முழக்கம் செய்திருப்பதையும் - நாம் படித்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

பாரதியின் இப் பெருமைக்கு மற்றொரு கரும்புக் கணுவாக அமைகிறது. நாமக்கல் கவிஞரின் பழம் பாடல்.

“தமிழன் என்றொரு இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்;
அன்யே அவனுடை வழியாகும்!”