உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25 தென்மொழி




கற்றவை. 'பசிபிக்' என்ற சொல்லுக்கு அமைதி என்று பெயர். ஆனால் இதன் சில பகுதிகளில் கடும் புயல்களும் தோன்றும். இதற்கு உலகப் பெருங்கடல் என்னும் பெயரும் உண்டு. உலக மேற்பரப்பில் மூன்றில் ஒரு பங்கை இக்கடல் அடைத்துக் கொண்டுள்ளது. அனைத்துலக நாட்கோடு என்னுங் கற்பனைக்கோடு இதன் வழியாகச் செல்கின்றது. இக்கோட்டில் நாள் மாற்றம் ஏற்படும்; காரிக்கிழமை ஞாயிற்றுக்கிழமையாக மாறும். இதன் ஆழம் ஏறத்தாழ 61/2 கற்கள் எவரெஃசிட் மலை உச்சியை இதில் மூழ்கச் செய்தால் அதற்குமேல் ஒரு கல் உயரத்திற்கு நீர் நிற்கும். இதனடியில் உயரமுள்ள மலைகளும், ஆழமான குடைவுகளும் உள்ளன மலைகள் பல நீரினால் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் மேற்பரப்புக்கு மேலும் மலைகள் உண்டு. எரிமலைகளும் உண்டு. மற்றக் கடல்களினும் இக்கடலுக்கு உப்புத் தன்மை குறைவு. பெரிங் கடல், சப்பான் கடல், மஞ்சள் கடல், சீனக் கடல் முதலியவை இதனோடிணைந்த உள்நாட்டுக் கடல்களாகும். இதன் நடுப் பகுதியில் எண்ணிறந்த திட்டுத் தொகுதிகள் உள்ளன இதன் கரைகளில் சில துறைமுகங்கள் இருந்த போதிலும் அட்லாண்டிக் கடலைப் போல் இஃது அவ்வளவு வாணிகச் சிறப்புடையது அன்று. இதன் குழி அளவு நிலவின் கொள்ளளவாக இருப்பதால், இதிலிருந்தே நிலவு பிரிந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது இக்கடலில் கோளெய்தி (Rocket) ஆய்வுகள் நடைபெறுகின்றன.
இக்கடலில்தான் 1941-ஆம் ஆண்டு தொடங்கி 1945 ஆம் ஆண்டு வரை நடந்த உலகப்போர் நடைபெற்றது. இக்கடவில் நிலத் திட்டுகள் மிகுதியாக உள்ளன. இவை மலையாலும் பவளத்தாலும் ஆனவை. பெரும்பாலானவற்றில் மக்கள் வாழமுடியாது. இத்திட்டுகளின் மொத்தப் பரப்பு 60,000 கற்பெருக்கமாகும். இங்கு எப்பொழுதும் வேனிற்காலமே.
இங்குள்ள நிலத்திட்டுகளில் பிசி, ஆவாய்த் திட்டுகள் சிறப்பான நாடுகளாக விளங்குகின்றன. ஆவாய்த் திட்டு அமெரிக்க ஒன்றிப்பு நாடுகளில் ஒன்று. இது 6,454 கற்பெருக்க முடையது. அமெரிக்காவிலிருந்து 2000 கற்கள் தொலைவிலிருக்கின்றது. கரும்பு, அன்னதாழம் ( அன்னாசி ) பழம், காப்பி, நெல், தேயிலை முதலியன பயிராகின்றன. இங்குச் சப்பானியர், சீனர், அமெரிக்கர், ஜூரோப்பியர் முதலிய இனத்தார் வாழ்கின்றனர். மக்கள் தோகை ஏறத்தாழ 6 இலக்கம். இன்னொரு தி்ட்டான பிசித் திட்டு 7,000 கற்பெருக்கமுடையது. 3 இலக்கம் பெயர்கள் வாழ்கின்றனர். தமிழர், பிசியர், சீனர், ஐரோப்பியர் முதலியோர் இங்கு வாழ்கின்றனர். தமிழர்கள் 40,000 பெயர்கள் உள்ளனர்.