பக்கம்:தேன்மழை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சுரதாவின் தேன்மழை

38



பத்தினி சொன்னால் பெய்யும்

      பனிமழை என்பர். இந்த

உத்தமி வாத மெல்லாம்

      ஊரினை ஏய்ப்ப தாகும் 

சித்திரப் பல்லி யேநீ

      வடமேற்குத் திக்கை நோக்கிக் 

கத்தினால் வானம் பெய்யும்

      என்பதும் கதையே என்பேன்!





வாலாட்டு கின்றாய் வேங்கை

       வாலாட்டும் நாட்டில்; நீயுன் 

வாலாட்டக் கண்டு கோபம்

       வரவில்லை எனினும் நாங்கள்

தாலாட்டும் தமிழை வீழ்த்தச்

       சதிசெய்யும் பகைவர் கூட்டம் 

வாலாட்டத் தொடங்கு மாயின்

       வாலறு பட்டே தீரும்!





பாலிலே குளித்திட் டாளாம்

    பனிமங்கை கிளியோ பாத்ரா 

காலையில் எழுந்து காக்கை

    கட்டாயம் குளிக்கும்: ஈந்தின்

ஓலைபோல் நீண்ட நீயோ

    ஒருநாளும் குளிப்ப தில்லை 

தோலுடல் வியர்த்தா லன்றோ

    தூயநீ ராடு வாய்நீ?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/40&oldid=495507" இலிருந்து மீள்விக்கப்பட்டது