உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கச்சிக் கார்மேனி அருளாளர்

9

ஆதிசேடன் தவம் செய்த இடமாகும். இதன் நடுவில் ஒரு நீராழி மண்டபத்தைக் காண்கின்றோம். அந்த மண்டபத்தின் அடித்தலத்தில் உள்ள மாடம் ஒன்றில் அத்திவரதர் கோயில் கொண்டுள்ளார். அத்திரமரத்தில் உருவானவர் இவர்; அந்தத் தண்ணிருக்குள் மூழ்கிச் சயனத்திருக்கோலத்தில் இருக்கின்றார். பாலாழியில் அறிதுயில் கொள்ளும் பரமனைப் போலன்றி இவர் நீருக்குள்ளே ஆழ்ந்த துயில் கொண்டு விடுகின்றார். நாற்பது ஆண்டுகட்கு ஒருமுறை திருக்குளத்திலுள்ள நீரைக் காலி செய்து இந்த எம்பெருமானை வெளியில் கொண்டு வருகின்றனர். ஒரு மண்டல காலம் பூசை, புனஸ்காரம் முதலிய மரியாதைகள் யாவும் அவருக்கு நடக்கும். அதன் பிறகு அவர் அந்த நீருக்குள்ளே தன் சொந்த இடத்திற்குச் சென்று ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொண்டு விடுவார். இந்த அத்திவரதரே ஆதி வரதர் என்பது செவிவழிச் செய்தியாகும். இதன் பிறகு நந்தவனம் கீழைக் கோபுரம் முதலானவற்றையும் கண்டுகளிக்கின்றோம்.

வரதராசரின் திருக்கோயிலைவிட அவருக்கு நடைபெறும் விழாக்கள் பெரும் புகழ் பெற்றவை. வரதரது பெருவிழா (பிரமோத்சவம்) வைகாசித் திங்களில் நடைபெறும். இதைவிடப் பெரும் புகழ் பெற்றது வைகாசி பெளர்ணமியில் நடக்கும் கருடசேவை. அதிகாலையிலேயே வரதராசர் பெரிய திருவடியின் மீது ஏறிக் கொண்டு திருக்கோயிலை விட்டுப் புறப்படுவார். அப்பொழுது ஆயிரக்கணக்காகத் திரண்டு இருக்கும் மக்கட் கடல்,

“பறவை ஏறு பரமபுருடா!
       நீஎன்னைக் கைக்கொண்டபின்
பிறவி என்னும் கடலும்வற்றிப்
       பெரும்பதம் ஆகின்றதால்,
இறவு செய்யும் பாவக்காடு
       தீக்கொளிஇ வேகின்றதால்;
அறிவை என்னும் அமுதஆறு
       தலைப்பற்றி வாய்க்கொண்டதே”[1]

(பறவை-கருடன்; கைக்கொண்டபின்-ஆட்படுத்திக் கொண்டபிறகு; பெரும்பதம் -பெரிய தரம், இறவு-சாக்காடு; பாவக்காடு-பாவ சமுதாயம்: திக்கொளிஇ -நெருப்புப்பட்டு; அறிவை-ஞானம் (இதில் ஐ-சாரியை); தலைப்பற்றி வாய்க்கொள்ளுதல்-மேன்மேல் வளர்ந்து பெருகிச் செல்லுதல்)
  1. பெரியாழ்.திரு-5.4:2