உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

கூறிய ஏழு திருப்பதிகளிலும் எம்பெருமான் எளிமையும் சீலமும் தோன்ற எழுந்தருளியிருப்பதாகக் கூறுகின்றார் ஆழ்வார். பிரபத்தி செய்வதற்கு வேண்டுபவையான வாத்ஸல்யம்,’ சுவாமித்துவம், செளசீல்யம்,” செளலப்பியம்’ போன்ற திருக்குணங்கள் நிறைந்த இடம் அர்ச்சாவதாரமே என்ற சாத்திர உண்மையை வற்புறுத்தவே இவர் இங்ஙனம் கூறியிருப்பதாகக் கருதுகின்றோம்.

இங்ஙனம் சிந்தித்துக்கொண்டே திருக்கோயிலினுள் நுழை கின்றோம். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் ஆள் அழகிய சிங்கரையும் (முகுந்த நாயகன்) வேளுக்கை வல்லித் தாயாரையும் சேவிக்கின் றோம். இந்த நிலையில்,

“தனக்குரிய னாய்அமைந்த தானவர்கோன் கெட்டான்; உனக்குரிய னாயமைந்தன் உய்ந்தான்-நினைக்குங்கால் வேளுக்கை ஆளரியே! வேறுதவி உண்டோஉன் தாளுக்கு ஆள்ஆகா தவர்க்கு.”

(தனக்கு உரியனாய்-சுவாதந்திரன் என்று இருந்த; தானவர்கோன்-இரணியன்: கெட்டான் - அழிந்தான்; உனக்கு உரியன் ஆய மைந்தன்-பிரகலாதன்: உய்ந்தான் - நல்வாழ்வு பெற்றான்: தாள்-திருவடி ஆள் ஆகாதவர்-அடிமை ஆகாதவர்)

என்ற திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வர அதனையும் ஒதுகின்றோம். எம்பெருமானது திருவடிகளில்

ஆட்படாதவர்கள் ஆபத்துக் காலத்தில் ஒரு துணையுமின்றி அழிய வேண்டிவரும் என்ற பேருண்மையை உணர்கின்றோம். இந்த உணர்வுடன் திருக்கோயிலை விட்டு வெளிவருகின்றோம்.

28. வாத்ஸல்யம் : வத்ஸ் -பசுங்கன்று. வாத்ஸல்யம் - கன்றினிடம் பசு

கொள்ளும் அன்பு.

29. சுவாமித்துவம் : சொம் -உடமை, சொத்து : சுவாமி-உடையவன் ;

சுவாமித்துவம் - உடையவனாக இருத்தல், வல்லமை, பெருமை.

30. செளசீல்யம்-சு+சீலம் - நற்பண்புடைமை; அதாவது சீல குணம்; தன்னிலும்

தாழ்நதோரிடம் புரையறப் பழகுந்தன்மை.

31. செளலப்பியம் சு-லப-எளிதில் கிடைத்தல்; யாருக்கும் எளிதில்

அணுகும்படியிருத்தல்; எளியனாம் தன்மை.

32. நூற். திருப். அந் - 77.