பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

துணைவனாகவும் இருந்து தீரவேண்டியவனானான். ஆகையால், மனிதன் தனது நண்பர்களெல்லோராலும் வஞ்சிக்கப்பட்டு, கைவிடப்பட்டு, ஆழ்ந்த துயரத்தில் அமிழ்ந்து தவிக்கும்பொழுது, தனக்கு எப்பொழுதும் ஆதரவளிக்க, உற்றதுணை புரிய உண்மையான நண்பன் ஒருவன் இருக்கிறானென்றும், அவன் தான் கடவுளென்றும் அவனால் எதுவும் செய்ய முடியுமென்றும் கருதுகிறான். இந்த அபிப்பிராயத்தால் மனிதன் ஒருக்கால் ஆறுதல் அடையலாம். ஆதிகாலத்தில், மனிதன் மிருகப் பிராயத்திலிருந்த நாளில், இந்த அபிப்பிராயம் உண்மையாகவே அவனுக்கு உபயோகமாயிருந்தது. கடவுள் உணர்ச்சி கஷ்ட திசையிலிருக்கும் மனிதனுக்கு உதவி செய்யக்கூடும்.

ஆனால், மதத்தின் குறுகிய நோக்கத்தோடும், விக்கிரக ஆராதனையோடும் போராடியதுபோல் சமுதாயம் இந்தக் கடவுள் நம்பிக்கையோடும் போராடித் தீரவேண்டும். இவ்விதமாக மனிதன், தன் கையே தனக்குத் துணையெனக் கொண்டு, யதார்த்தவாதியாக முயற்சிக்கின்றபொழுது, அவன் கடவுள் நம்பிக்கையை உண்மையாகவே உதறித் தள்ளுவதோடு, சந்தர்ப்பங்களாலேற்படும் துயரங்களையும், தொந்தரவுகளையும் எதிர்த்துத் தீர வேண்டிவரும். இதுதான் எனது உண்மையான நிலைமை.

நண்பரின் ஆசை !

தோழர்களே ! இது எனது அகங்காரமல்ல. எனது ஆராய்ச்சியின் தோரணையே. என்னை நாஸ்திகனாக்கிற்று. கடவுள் நம்பிக்கையும், தினசரிப் பிரார்த்தனைகளும் சுயநலம் நிறைந்த மனிதனை அகவுரவப்படுத்துகின்ற செய்கைகளென்று நான் கருதுகிறேன். ஆகவே இப்படிப்பட்ட பிரார்தனைகள், எனக்கு உதவி புரியக்கூடுமென்று நிரூபிக்குமா அல்லது எனது நிலைமையை மோசமாக்குமாவென்பது எனக்கே விளங்கவில்லை. நான் கஷ்ட நிஷ்டூரங்களைத் தைரியமாக எதிர்த்து நின்ற நாத்திகர்கள் பலரைப் பற்றிப் படித்திருக்கிறேன். ஆதலால், எனது முடிவுரையில், தூக்குமேடையிற்கூட ஆண்மையுள்ள மனிதனைப்போல் தலை நிமிர்ந்து நிற்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.